இசை வெளியீட்டு விழாவுக்கு படத்தின் நாயகி வராத ஆத்திரத்தில், கே.ராஜன் மற்றும் நடிகர் கஞ்சா கருப்புக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் கொடுத்து மேடையிலேயே சம்பந்தப்பட்ட நடிகையை ஆபாசமாக திட்டவைத்த சம்பவம் அரங்கேறி உள்ளது.
‘ஓங்காரம்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவானது வடபழனி பிரசாத் லேபில் நடைபெற்றது. தயாரிப்பாளர் கே.ராஜன், நடிகர் கஞ்சா கருப்பு, இயக்குனர் மோகன் ஜி மற்றும் படக்குழுவினர் கலந்துக் கொண்டனர். ஏ.ஆர். கேந்திர முனியசாமி என்பவர் தயாரித்து இயக்கி கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் வர்ஷா விஸ்வநாத் நாயகியாக நடித்துள்ளார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சிக்கு நாயகியை அழைத்த போது, ரூ.1 லட்சம் ரூபாய் கொடுத்தால் மட்டுமே வருவேன் என்று நடிகையின் தாய் கூறியுள்ளார். பணம் கொடுக்க மறுத்ததால், நடிகை வர்ஷா விழாவுக்கு வரவில்லை.

படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்க 5 ஆயிரம் ரூபாய் பணம் வாங்குவதாக ஒப்புக் கொண்ட கே.ராஜன், இந்த நிகழ்ச்சிக்கு நடிகை வராததால் கண்டிப்பாக ’இனிமேல் நீ தமிழகத்தில் நடிக்க வாய்ப்பே இல்லை’ என்றும் படத்தின் நாயகியைவிட நடிகையின் அம்மாதான் ரொம்ப பிரச்சனை கொடுக்கிறார்கள். வரட்டும் அவர்களின் முட்டியை உடைத்து விடலாம் என்று ஆவேசமாக பேசினார்.

மேலும், ராஜா ராஜ சோழன் இந்துவா? முஸ்லிமா? என்று, எதற்கு இதெல்லாம்..? படத்தை எடுத்தோமா, சம்பாரிச்சமான்னு இருக்கணும். இதெல்லாம் தேவை இல்லாத விஷயம் என்று ஆவேசமான நடிகர் கஞ்சா கருப்பு, இந்த படத்தில் நடித்துள்ள நடிகை இசை வெளியீட்டு விழாவிற்கு வருவதற்கு 1 லட்சம் ரூபாய் பணம் கேட்டாராம், என்று கூறி அவரை ஆபாசமாக திட்டிவிட்டு அங்கிருந்து சென்றார். கஞ்சா கருப்பு மேடை நாகரீகமின்றி ஆபாசமாக பேசிய நிலையில், அவர் அருகில் நின்ற பெண் என்ன செய்வதென்று தெரியாமல் முகத்தை மூடிக் கொண்டார்.

ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு வராத நாயகி வர்ஷாவை வறுத்தெடுக்க திட்டமிட்ட படத்தின் தயாரிப்பாளரும் இயக்குனருமான கேந்திரமுனுசாமி, தயாரிப்பாளர் கே.ராஜன், மற்றும் கஞ்சா கருப்புவுக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்து திட்டி பேச வைத்ததாக தகவல் வெளியானதால் இது குறித்து நடிகர் சங்கத்தில் புகார் அளிக்க திட்டமிட்டுள்ளனர்.