தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின், திடீரென முன்னணி இயக்குநர் செல்வராகவன் வீட்டிற்குச் சென்று சந்தித்துப் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக இருக்கும் செல்வராகவனின் வீட்டிற்கு நேற்றிரவு திடீரென சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், செல்வராகவன் மற்றும் அவரது குடும்பத்தினரோடு பேசிவிட்டு, அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். இந்தப் புகைப்படத்தை இயக்குநர் செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், செல்வராகவன், அவரது குடும்பத்தினர் மற்றும் தனுஷ் ஆகியோரின் தந்தை இயக்குநர் கஸ்தூரி ராஜா, அவரது மனைவி உள்ளிட்ட குடும்பத்தினர் உள்ளனர். இந்தப் படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ள செல்வராகவன், ’தமிழக முதல்வர் எங்கள் வீட்டிற்கு வருகை தந்தது என்னவொரு சிறப்பான தருணம்’ எனப் பதிவிட்டுள்ளார்.
இயக்குநர் செல்வராகவன் வெளியிட்ட இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் தீயாகப் பரவி வருகிறது. முதல்வர் முக.ஸ்டாலின் திடீரென செல்வராகவன் வீட்டுக்கே சென்று அவரது குடும்பத்தினருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சம்பவம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது, செல்வராகவன் தனுஷ் நடிப்பில், ‘நானே வருவேன்’ திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படம் செப்டம்பர் 29ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சாணிக்காயிதம், பீஸ்ட் ஆகிய படங்களை தொடர்ந்து இந்தப் படத்திலும் ஒரு முக்கியமான கேரக்டரில் நடித்திருக்கிறார் செல்வராகவன். மேலும் மோகன் ஜி இயக்கத்தில் ‘பகாசூரன்’ திரைப்படத்திலும் வித்தியாசமான கேரக்டரில் நடித்து வருகிறார் செல்வராகவன்.
சென்னையில் சில மாதங்களுக்கு முன்பு நடந்த புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் பங்கேற்ற செல்வராகவன், “எனக்கு சிறுவயதிலிருந்தே முக.ஸ்டாலினை மிகவும் பிடிக்கும். இப்படிப்பட்ட ஒரு முதல்வர் தமிழகத்திற்கு வர மாட்டாரா என மக்கள் ஏங்கிக் கொண்டிருந்தார்கள். ‘மக்கள் முதல்வர்’ என்றால் அது முதலமைச்சர் ஸ்டாலின் தான். நமது தமிழ்நாடு உலகிலேயே ஒரு சிறந்த வளர்ந்த மாநிலமாக வளர வேண்டுமென்றால் அது நம் முதலமைச்சரால் தான் முடியும்” என்று பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.