ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குனர் ராம் கோபால் வர்மா. சத்யா, கம்பெனி, பூட், கோவிந்தா கோவிந்த போன்ற பல படங்களை உதாரணமாக சொல்லலாம். உண்மையான சம்பவங்கள் மற்றும் மனிதர்களை அடிப்படையாக கொண்டு தான் படங்களை இயக்கினாலும், சர்ச்சைக்குரிய கருத்துகள் மூலம் பெரிதும் அறியப்பட்டவர் ராம் கோபால் வர்மா. அதே போல் அவ்வப்போது சமூக வலைதளங்களிலும் சர்ச்சைக்குரிய பதிவுகளை வெளியிட்டு சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இந்நிலையில் பிரபல இயக்குனர் எஸ்.எஸ். ராஜமௌலி குறித்து ராம் கோபால் வர்மா ட்விட்டரில் தெரிவித்துள்ள கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.. ராஜமௌலி, ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூனிடன் உரையாடும் வீடியோவை பகர்ந்து அவர் 3 ட்வீட்களை பதிவிட்டுள்ளார்.. அவரின் முதல் ட்வீட்டில் “ தாதா சாஹப் பால்கே முதல் இன்று வரை இந்திய சினிமா வரலாற்றில் ராஜமௌலி உட்பட யாரும் இந்த தருணத்தை ஒரு இந்திய இயக்குனர் கடந்து செல்வார் என்று நினைத்து பார்த்திருக்க முடியாது..” என்று குறிப்பிட்டுள்ளார்..
தனது 2-வது ட்வீட்டில் “ MughaleAzam படத்தை இயக்கிய கே.ஆசீப் முதல், Shole படத்தை இயக்கிய ரமேஷ் சிப்பி போன்ற திரைப்பட ஜாம்பாவான்கள் மற்றும் இந்தியாவின் ஆதித்யா சோப்ராக்கள், கரண் ஜோஹர்கள், பன்சாலிக்கள் உள்ளிட்ட இயக்குனர்களை எல்லாம் நீங்கள் மிஞ்சிவீட்டீர்கள்.. உங்கள் பாதத்தை தொட்டு வணங்குகிறேன்..” என்று குறிப்பிட்டுள்ளார்..
ராம் கோபால் வர்மாவின் 3-வது ட்வீட்டில் “ ராஜமௌலி சார்.. தயவு செய்து உங்களின் பாதுகாப்பை அதிகரிக்கவும், ஏனென்றால் நான் உட்பட இந்தியாவில் உள்ள திரைப்பட இயக்குனர்கள் பலர், பொறாமையால் உங்களைக் கொல்ல ஒரு கொலை குழுவை உருவாக்கியுள்ளனர், அதில் நானும் ஒரு பகுதியாக இருக்கிறேன். நான் மது அருந்தி இருப்பதால் ரகசியத்தை உளறிவிட்டேன்..” என்று குறிப்பிட்டுள்ளார்.. அவரின் இந்த கருத்து ராஜமௌலி ரசிகர்களின் கோபத்தை தூண்டியுள்ளது..