‘கோலமாவு கோகிலா’ திரைபடத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் நெல்சன் திலீப் குமார். நயன்தாரா நடிப்பில் உருவான அப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனை வைத்து ‘டாக்டர்’ திரைப்படத்தை இயக்கினார். இப்படமும் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்தது. இதனால் நெல்சன் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். அதோடு தனது திரைப்படம் பார்க்க வந்தால் இரண்டரை மணி நேரம் சிரிப்பு உறுதி என்பதையும் ரசிகர்களின் மனதில் பதிய வைத்தார்.
இதன் தொடர்ச்சியாக, நடிகர் விஜய்யுடன் இணைந்து பீஸ்ட் திரைப்படத்தை இயக்கினார். ஆனால், இப்படம் கடுமையான விமர்சனங்களைப் பெற்றதுடன் ரசிகர்களின் கிண்டலுக்கு நெல்சன் ஆளானார். இந்நிலையில், நெல்சன் நடிகர் ரஜினிகாந்த்தை வைத்து இயக்கிய ஜெயிலர் திரைப்படம் ரூ.600 கோடிக்கு மேல் வசூலித்து மிகப்பெரிய வெற்றிப்படமாக உருமாறியுள்ளது. இப்படத்திற்கு நெல்சன் ரூ.22 கோடி சம்பளமாகப் பெற்றார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் நெல்சனை வைத்து அடுத்த படத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், அதற்காக நெல்சனுக்கு சம்பளமாக ரூ.55 கோடி கொடுக்கவும் அந்நிறுவனம் முன்வந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஜெயிலர் வசூலால் நெல்சனின் சம்பளம் அதிவேகமாக உயர்ந்திருப்பதாக சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.