இந்தியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்காக சல்மான் கான் கேட்ட சம்பளத் தொகையால் டிவி நிர்வாகமே ஆடிப்போயிருக்கிறது.
நடிகர் சல்மான் கான் கடந்த 13 ஆண்டுகளாக இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் 16-வது சீசன் விரைவில் தொடங்க இருக்கிறது. இந்த சீசனை தொகுத்து வழங்க சல்மான் கான் கேட்கும் கட்டணம் டிவி நிர்வாகத்தையே அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது. ஏற்கனவே கொடுத்த தொகையைவிட கூடுதலாக இரண்டு மடங்கு கட்டணத்தை அதிகரித்துக் கொடுக்க வேண்டும் என சல்மான் கான் கேட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. சம்பளத்தை அதிகப்படுத்தினால் மட்டுமே நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவேன் என்பதில் சல்மான் கான் உறுதியாக இருப்பதாகவும் தெரிகிறது.
இதற்கு முன்பு கடைசியாக இந்நிகழ்ச்சியை நடத்த சல்மான் கான் ரூ.350 கோடி சம்பளமாகப் பெற்றிருக்கிறார். ஆனால், வரும் சீசனைத் தொகுத்து வழங்க ரூ.1,050 கோடி சம்பளமாகக் கேட்டிருக்கிறார். இதைக் கேட்ட டிவி நிர்வாகம் அதிர்ச்சியடைந்திருக்கிறது. ஒவ்வொரு முறையும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து தன்னை விடுவித்துவிடும்படி கேட்டுக்கொண்டதாகவும், ஆனால் என்னை விட மறுக்கிறார்கள் என்று சல்மான் கான் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றில் கூறியிருந்தார். ஆனாலும், ஒவ்வொரு ஆண்டும் சல்மான் கானே இந்த நிகழ்ச்சியை தொகுத்து வருகிறார்.
சல்மான் கானின் சம்பளப் பிரச்சனை ஒரு பக்கம் சென்று கொண்டிருந்தாலும், மற்றொரு பக்கம் நிகழ்ச்சியை நடத்த டிவி நிர்வாகம் தேவையான ஏற்பாடுகளில் இறங்கியிருக்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களைத் தேர்வு செய்யும் வேலையில் டிவி நிர்வாகம் தீவிரமாக இறங்கியிருக்கிறது. அர்ஜூன் பிஜ்லானி, திவ்யங்கா திரிபாதி, சிவாங்கி ஜோஷி, தினா தத்தா, ஆருதி தத்தா, பூனம் பாண்டே, சிவம் சர்மா, ஜெய் துதானே, முன்முன் தத்தா, கேட் கிறிஸ்டியன் உட்பட மொத்தம் 17 பேரை இந்நிகழ்சிக்காக டிவி நிர்வாகம் அணுகியிருக்கிறது.