விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’ராஜா ராணி 2’ சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் பிரபலம் ஒருவர், சீரியல் நடிகையை காதல் திருமணம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார்.
நடிகர், நடிகைகளிடையே காதல் ஏற்பட்டு அவர்கள் திருமணம் செய்துகொள்வது சமீப காலமாக அதிகரித்துள்ளது. ஏற்கனவே சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்த செந்தில் – ஸ்ரீஜா, ராஜா ராணி சீசன் 1-ல் நடித்த சஞ்சீவ் – ஆல்யா மானசா, திருமணம் சீரியலில் நடித்த சித்து – ஸ்ரேயா என இந்த லிஸ்ட் நீண்டு கொண்டே செல்கிறது. அந்த வரிசையில் தற்போது இணைந்திருப்பவர்கள் பிரிட்டோ – சந்தியா ராமச்சந்திரன் ஜோடி. இவர்கள் இருவரும் தவமாய் தவமிருந்து என்கிற சீரியலில் ஜோடியாக நடித்து வந்தனர். அதில் பிரிட்டோ பாண்டியாகவும், சந்தியா மலர் என்கிற கதாபாத்திரத்திலும் நடித்து வந்தனர்.
அப்போது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டு, தற்போது இருவரும் குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமணத்துக்கும் தயாராகி உள்ளனர். அதன்படி கடந்த ஜனவரி 25ஆம் தேதி பிரிட்டோ – சந்தியா ராமச்சந்திரன் ஜோடிக்கு திருமணம் நிச்சயமாகி உள்ளது. இந்த நிச்சயதார்த்ததில் குடும்பத்தினரும், நெருங்கிய நண்பர்களும் மட்டுமே கலந்துகொண்டுள்ளனர். தற்போது நிச்சயதார்த்தத்தின் போது ஜோடியாக எடுத்த புகைப்படத்தை இருவரும் இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளனர். இதைப் பார்த்த ரசிகர்கள் இருவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். நடிகை பிரிட்டோ, விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியலிலும் நடித்து வருகிறார். இவர் பிக்பாஸ் பிரபலம் ரியோ ராஜின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.