ராகேஷ் இயக்கத்தில் ராமராஜன், ராதாரவி, எம்.எஸ்.பாஸ்கர் நடிக்கும் ‘சாமானியன்’ திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு ராமராஜன் நாயகனாக கம்பேக் கொடுக்க இருக்கும் இந்தப் படம் ராமராஜன் நடிக்கும் 45-வது படமாக உருவாகிறது.
இந்த டீசர் வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் ராமராஜன், “ராதாரவி அண்ணனுடன் இது எனது 4-வது படம். எம்.எஸ்.பாஸ்கர் நான் உதவி இயக்குநராக இருந்த காலத்தில் இருந்தே பழக்கம். அவர்கள் இருவருடனும் இணைந்து நடித்தது மகிழ்ச்சி. இந்தப் படத்தில் நாயகியாக நக்ஷா சரண் நடித்திருக்கிறார். ஆனால், அவர் எனக்கு ஜோடி இல்லை. ஆனாலும் அதை எல்லாம் நான் எதிர்பார்க்கவில்லை. காரணம் படத்தின் கதை.

இந்த கிருஷ்ணவேணி தியேட்டரில் நிகழ்ச்சி நடப்பது சந்தோசமாக இருக்கிறது. நான் நடித்த கரகாட்டக்காரன் ரிலீஸ் நாட்கள் நினைவுக்கு வருகிறது. இந்த மாதிரி ஒரு நிகழ்வு நடக்கிறது என ஒரு ஃபோன்தான் செய்தேன். உடனடியாக என் ரசிகர் மன்ற நண்பர்கள் இவ்வளவு பேர் வந்திருக்கிறார்கள். ஆரம்பத்தில் இருந்தும் இன்று வரை அவர்கள் என்னுடன் தொடர்பில் இருக்கிறார்கள். நான் படம் நடிக்க வேண்டும் என தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருப்பார்கள். நடிக்க ஆரம்பித்து இருவது படங்கள் தொடர்ந்து ஹிட் கொடுக்க காரணம், ரசிகர்கள் தான். நான் சாதாரணமாக சினிமாவுக்கு வரவில்லை. 5 வருடங்கள் தியேட்டரில் டிக்கெட் கிழிக்கும் வேலையில் இருந்து பலவும் செய்தேன். பிறகு மெட்ராஸ் வந்து 2 வருடம் போராடி உதவி இயக்குநராக சேர்ந்தேன். பல படங்களில் பணியாற்றி தான் பிறகு ஹீரோவானேன்.

என்னுடைய ரசிகர்கள் படத்தின் டீசரைப் பார்த்ததும் நினைக்கலாம், ‘சாமானியன்’னு டைட்டில் வெச்சுட்டு துப்பாக்கி எல்லாம் வைத்திருக்கிறேன் என்று. வயல்காட்டிலும், கிராமத்திலும் நடித்த ஒருவன் கையில் துப்பாக்கி ஏன் என்று. ஆனால் இப்படியான ஒரு ராமராஜனை ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என நம்பிக்கை வைத்த இயக்குநரை பாராட்ட வேண்டும். எத்தனையோ கதைகள் வந்தது. ஆனால், எதுவும் எனக்குப் பிடிக்கவில்லை. நூறு கோடி, ஆயிரம் கோடி கொடுத்தாலும் தாறுமாறான படங்களில் நடிக்கும் அளவுக்கு தரம் கெட்டவன் கிடையாது. எம்.ஜி.ஆர் வழியில் வந்தவன். தியேட்டரில் வேலை பார்த்த போது அவரின் படங்களையும் கருத்துகளையும் பார்த்து வளர்ந்தவன்.

இந்தப் படத்தின் கதை திரைக்கதை கேட்டதும் பிடித்தது. முதல் படம் போல் பயந்து பயந்து நடித்திருக்கிறேன். இந்தப் படத்தின் இன்டர்வெல் மாதிரி ஒரு இன்டர்வெல் காட்சியைக் கேட்டதே இல்லை. படம் பார்க்கும் போது யாராலும் கணிக்க முடியாது. நடிக்க வந்து வெற்றிப் படங்கள் கொடுத்த போது 50 படங்கள் சோலோ ஹீரோவாக நடித்து பிறகு படங்கள் இயக்க மட்டும் செய்ய வேண்டும் என நினைத்தேன். ஆனால் 2010இல் ஒரு விபத்து நடந்தது. பின்பு 50 படம் என்பது 45 படங்கள் என மாற்றிக் கொண்டேன். மேதை படம் 44-வது படம். இன்னொரு படம் வேண்டுமே எனத் தேடிய போது தான் ‘சாமானியன்’ கதை வந்தது. நடிக்க வந்து 44 வருடங்கள் ஆகிறது. சீக்கிரம் 45 வருடங்கள் ஆகிவிடும். இந்தப் படத்தையும் என் ரசிகர்களும் மக்களும் வெற்றி பெற செய்வார்கள் என நம்புகிறேன்” என்றார்.