நடிகர் ரஜினிகாந்த் தனது இல்லம் முன்பு காத்திருந்த ரசிகர்களுக்கு இனிப்புகள் வழங்கி தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
தமிழ் சினிமாவின் ‘சூப்பர் ஸ்டார்’ என்றழைக்கப்படும் நடிகர் ரஜினிகாந்த், தனது விடா முயற்சியாலும், அசாதாரண நடிப்பாலும் தனக்கென ரசிகர் கூட்டத்தை சம்பாதித்துக் கொண்டவர். இவர், 45 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் பயணித்துக் கொண்டிருக்கிறார். பண்டிகை நாட்களில் இவரிடம் வாழ்த்து பெறுவதற்காக, இவரது இல்லம் முன்பு ரசிகர்கள் கூடுவது வழக்கம். அதன்படி, தீபாவளித் திருநாளான இன்று நடிகர் ரஜினிகாந்த்தை சந்தித்து வாழ்த்து பெறுவதற்காக சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லம் முன்பாக ரசிகர்கள் அதிகாலை 5 மணி முதலே காத்திருந்தனர்.
ஈரோடு, செஞ்சி உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலிருந்து வந்து, காத்திருந்த ரசிகர்கள், ரஜினியின் இல்லம் முன்பு புகைப்படம் எடுத்து, அவரது பெயரை தொட்டு வணங்கினர். தொடர்ந்து தனது ரசிகர்களைக் காண்பதற்காக வந்த நடிகர் ரஜினிகாந்த், அவர்களுக்கு இனிப்புகள் வழங்கி தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும், ரசிகர்களுக்கு கையசைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். ரஜினியை சந்தித்து வாழ்த்து பெறுவதுதான் தங்களுக்கு தீபாவளி என கூறிய ரசிகர்கள், கருணை, இரக்கம் என்றால் அது ரஜினிகாந்த்தான் என ஆனந்த கண்ணீர் விட்டு நெகிழ்ந்தனர்.