நடிகர் திலகம் சிவாஜி கணேசன், தமிழ் சினிமாவால் தவிர்க்க முடியாத ஒரு நடிகர் ஆவா. இவரது இயற்பெயர் விழுப்புரம் சின்னையா மன்ராயா் கணேசமூர்த்தி ஆகும். ஆரம்பத்தில் மேடை நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த சிவாஜி கணேசன், 1952ஆம் ஆண்டு பராசக்தி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். வித விதமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து அதில் திறம்பட நடிப்பது இவரின் தனி திறனாகும். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் 288 படங்களில் நடித்துள்ளார். தமிழ் திரைப்படத்துறையில் 250 படங்களுக்கு மேல் கதாநாயகனாக நடித்த ஒரே நடிகர் சிவாஜி கணேசன்.

இவருக்கு பிரபு, ராம்குமார் என்ற இருமகன்களும் சாந்தி, ராஜ்வி என இரு மகள்களும் உள்ளனர். இதில் பிரபு மட்டும் தந்தையின் வழியில் சினிமாவில் கால்பதித்து, தனக்கென ஒரு இடத்தை உருவாக்கிக் கொண்டார். இளைய திலகம் என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் பிரபு இதுவரை, 100 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இவருடைய மகன் விக்ரம் பிரபு தாத்தா, தந்தை வரிசையில் இப்போது தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார்.

தஞ்சாவூர் மாவட்டம் சூரக்கோட்டை தான், சிவாஜி கணேசனின் சொந்த ஊர். இங்கு தோப்பு, வயல்கள், நடுவில் பிரம்மாண்டமாக அமைந்துள்ளது அவரது பூர்வீக பண்ணை வீடு. வாசலில் நுழைந்ததும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை, தென்னை தோப்பு, வயல்கள் என எங்கு பார்த்தாலும் பச்சை பசேலென இருக்கிறது. நடுவில் மண் சாலை, இருபுறமும் செழித்து வளர்ந்த தென்னை மரங்கள் என உள்ளே செல்ல செல்ல பழைய சினிமாவில் வருவது போல அழகாக பிரம்மாண்டமாக அமைந்திருக்கிறது சிவாஜியின் பண்ணை வீடு.

