ஒரே நாளில் படப்பிடிப்பு நடத்தி அடுத்த நாளில் படத்தை ரிலீஸ் செய்ய ‘பிதா’ படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
வரும் 7ஆம் தேதி காலை படப்பிடிப்பு தொடங்குகிறது. அன்றே எடிட்டிங், ரீ-ரெக்கார்டிங் போன்ற அனைத்துப் பணிகளையும் முடித்து, மறுநாள் 8ஆம் தேதி படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. எஸ்.சுகன் எழுதி இயக்கும் இதில் அனு, ஆதேஷ் பாலா, அருள்மணி, சாம்ஸ் நடிக்கின்றனர். இளையராஜா ஒளிப்பதிவு செய்ய, நரேஷ் இசையமைக்கிறார். பாபா கென்னடி வசனம் எழுத, வினோத் ஜாக்சன் ‘லைவ் சவுண்ட்’ மூலம் ஒலிப்பதிவு செய்கிறார். விச்சூர் எஸ்.சங்கர் தயாரிக்கிறார்.
டான்ஸ் மாஸ்டர் கலாவிடம் உதவியாளராக இருந்த சுகன், பிறகு இயக்குனர் ரமேஷ் செல்வனிடம் பணியாற்றினார். தற்போது ‘பிதா’ திரைப்படம் மூலம் இயக்குனராகிறார். இப்படம் குறித்து அவர் கூறுகையில், ’இதுவரை 8 குறும்படங்கள் இயக்கியுள்ளேன். முதல்முறையாக சினிமா படம் இயக்குவதால், ஏதாவது புதுமை செய்ய விரும்பினேன். முதல் நாள் காலையில் தொடங்கும் படப்பிடிப்பை நள்ளிரவு முடிகிறது. 80 சதவிகிதம் நைட் எஃபெக்ட் காட்சிகள் இடம்பெறுகிறது. 5 லொக்கேஷன்களில், 9 கேமராக்கள் மூலம் படப்பிடிப்பு நடத்தப்படுகிறது. ‘பிதா’ என்ற தலைப்புக்கு கீழே 23:23 என்ற எண்கள் இடம்பெறுகிறது. இதற்கான விடை ரிலீஸ் அன்று கிடைக்கும்’ என்றார்.