தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் யோகிபாபு. தற்போது ரஜினியின் ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார். இப்படம் நாளை திரைக்கு வர உள்ளது. இதுதவிர பாலிவுட்டில் அட்லீ இயக்கிய ஜவான் திரைப்படத்தில் ஷாருக்கான் உடனும் நடித்திருக்கிறார். இவரின் கால்ஷீட் கிடைக்காமல், பல தயாரிப்பாளர் ஏங்கி வருகின்றனர். சமீபத்தில், தோனி கூட தான் தயாரித்த முதல் படமான எல்.ஜி.எம் படத்திற்காக யோகிபாபுவின் கால்ஷீட் வாங்க படாதபாடு பட்டதாக கூறியிருந்தார். இப்படி நிற்க கூட நேரம் இல்லாமல் சுழன்று கொண்டிருக்கும் யோகிபாபு, தீண்டாமை கொடுமையை எதிர்கொண்டதாக வீடியோ ஒன்று வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியிருந்தது.
அதாவது, யோகிபாபு முருகன் மீது அதீத பக்தி கொண்டவர். அடிக்கடி முருகன் கோவிலுக்கு செல்வதை வழக்கமாகவும் வைத்துள்ளார். அந்த வகையில், சிறுவாபுரி முருகர் கோவிலில் சாமி தரிசனம் செய்து முடித்த பின்னர், புரோகிதர் ஒருவருக்கு கை கொடுக்கும் போது, அவர் யோகி பாபுவின் கையை தொடாமல் ஆசி வழங்கியது போல், ஒரு வீடியோ படு வைரலாக பரவியது. இதை பார்த்த ரசிகர்கள் சிலர் தீண்டாமை கொடுமை யோகி பாபுவுக்கு நடந்து விட்டதாக கூறி வந்த நிலையில், இந்த வீடியோ குறித்து யோகி பாபுவே தற்போது விளக்கம் கொடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “சிறுவாபுரி கோவிலுக்கு 12 ஆண்டுகளுக்கும் மேலாக நான் சென்று வருகிறேன். அப்போதிலிருந்தே அந்த குருக்களை எனக்கு தெரியும். வேண்டுமென்றே யாரோ இப்படி வதந்திகளை பரப்பி விடுகிறார்கள். அது பழைய வீடியோ. இதில் சாதி பார்க்க வேண்டாம், குருக்களால் தீண்டாமை எதுவும் நடைபெறவில்லை” என விளக்கம் அளித்துள்ளார்.