”ரஜினி படத்தின் வாய்ப்பை இழந்ததை எண்ணி வருத்தப்பட்டேன்” என நடிகை இந்துஜா தெரிவித்துள்ளார்.
துள்ளுவது இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய படங்களை தொடர்ந்து செல்வராகவன் – தனுஷ் கூட்டணி 5-வது முறையாக இணைந்துள்ள படம் “நானே வருவேன்”. கிட்டதட்ட 12 ஆண்டுகளுக்குப் பின் இந்த கூட்டணியுடன் யுவனின் இசையும் இணைந்துள்ளதால் ரசிகர்களுக்கு பட அறிவிப்பு குறித்து வெளியாகும் போதே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. கலைப்புலி எஸ். தாணு தயாரித்துள்ள இந்தப் படத்தின் நாயகியாக இந்துஜா நடித்துள்ள நிலையில் ‘நானே வருவேன்’ படம் நாளை தியேட்டர்களில் வெளியாகவுள்ளது.

இதற்கிடையே, இப்படம் தொடர்பாக நடிகை இந்துஜா இணைய ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். அதில் ’மேயாத மான’ படம் வெளியாகியிருந்த போதே தனுஷ் படம் பார்த்து விட்டு நல்லா நடிச்சிருக்கீங்க. நாம் சேர்ந்து படம் பண்ணுவோம் என்றார். நான் ‘துள்ளுவதோ இளமை’ படத்தில் இருந்தே தனுஷின் ரசிகை. என்னை தனுஷ் ஃபேன் என சொல்லித்தான் அடையாளப்படுத்துவார்கள். அவரிடமிருந்து கால் வந்த போது வீட்டில் டான்ஸ் ஆடினேன். கர்ணன் ஷூட்டிங்கில் தான் தனுஷை சந்தித்து இப்படம் பற்றி பேசினேன். அதன்பின் கதையில் பல மாற்றங்கள் செய்யப்பட்டது. ஆனால், என்னை மாற்றிவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். அதேசமயம் செல்வராகவன் ரொம்ப அமைதியானவர். கேட்ட கேள்விக்கு மட்டுமே பதில் சொல்வார். அதனால், எனக்கு அவரைப் பற்றி தெரிந்து கொள்வதில் ஆர்வம் ஏற்பட்டது”.

மேலும், இந்துஜாவிடம் எந்த படத்தையாவது மிஸ் செய்து விட்டோம் என அழுதுருக்கிறீங்களா? என கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த இந்துஜா, “நான் அழுதது இல்லை. ஆனால் வருத்தப்பட்டிருக்கிறேன். அந்த படம் ரஜினி படமான தர்பார் தான். அந்த டைம்ல நான் பிகில் படம் பண்ணிட்டு இருந்தேன். அதனால், என்னால் தர்பார் படத்துக்கு தேதிகளை ஒதுக்க முடியவில்லை. அட்லீயிடம் கூட சொன்னேன். அவரும் போய் நடிக்க சொன்னார். எனக்கு தேதிகள் ஒத்துவராததால் நடிக்க முடியவில்லை” என இந்துஜா தெரிவித்துள்ளார். தர்பார் படத்தில் இந்துஜா நடிக்க வேண்டிய ரோலில் தான் நடிகை நிவேதா தாமஸ் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.