மூன்றாவது மனிதரின் அறிவுரை உங்கள் உறவில் நுழையுமானால், அந்த உறவு மெல்ல மெல்ல பிரிவை நோக்கி தான் செல்லும் என்று பிரபல நடிகை ராதிகா ஆப்தே கருத்து தெரிவித்துள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகையான ராதிகா ஆப்தே, தமிழில் கார்த்தி, காஜல் அகர்வால் நடிப்பில் வெளியான ‘ஆல் இன் ஆல் அழகு ராஜா’ படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின்னர், பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ‘கபாலி’ படத்தில் நடித்து பிரபலமானார். முன்னதாக ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், பெங்காலி ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்துள்ளார். பாலிவுட்டில் பிரபலமான இவர், சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருப்பார். இந்தி மொழியில் முன்னணி நடிகைகளில் ஒருவரான இவர், அவ்வப்போது பேட்டியும் அளிப்பார்.
அப்படி சமீபத்தில் தனியார் ஊடக நிறுவனத்துக்கு அளித்த பேட்டியொன்றில், காதல் ஜோடிகள் மற்றும் தம்பதியினருக்கு அறிவுரை ஒன்றை வழங்கியுள்ளார். அதில் அவர் பேசியதாவது, “நானும் எனது கணவரும் எங்களுக்கு பிடித்த மாதிரியே சுதந்திரமாக அற்புதமான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறோம். அதிலும் எங்களுக்குள் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் நாங்கள் வேறு யாரது ஆலோசனையும் கேட்க மாட்டோம். பொதுவாக கணவன் – மனைவியோ அல்லது காதலன் காதலியோ தங்களுக்குள் ஏதாவது சண்டை சச்சரவு ஏற்பட்டால், மூன்றாம் மனிதரின் ஆலோசனையை பெறக்கூடாது. அது காதல் மற்றும் இல்லற வாழ்க்கைக்கு மிகவும் ஆபத்தானது.
அப்படி மூன்றாம் மனிதர் ஒருவரது ஆலோசனையை நாம் பெற்று எப்போது அதனை வரவேற்கிறோமோ அப்போதே உங்கள் உறவில் விரிசல் ஆரம்பமாகிவிட்டது என்றே சொல்லலாம். நமது கணவர் அல்லது காதலரை நம்மை விட யாரும் நன்றாக புரிந்து இருக்க முடியாது. அப்படி இருக்கும்போது நமது வாழ்க்கையில் நமது பிரச்சனையை எப்படி தீர்த்துக்கொள்ள வேண்டும் என்பது நம்மைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. அப்படி இருக்கையில் மூன்றாவது மனிதரின் அறிவுரை உங்கள் உறவில் நுழையுமானால், அந்த உறவு மெல்ல மெல்ல பிரிவை நோக்கி தான் செல்லும்” என்று கூறியுள்ளார்.
முன்னதாக பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி தனது ட்விட்டர் பக்கத்தில், “உங்க குடும்பத்துல எதாவது பிரச்சனன்னா, முடிச்ச வரைக்கும் உங்களுக்குள்ள அடிச்சிக்கங்க, இல்ல விட்டு விலகிடுங்க, இல்ல கைல கால்ல விழுந்து சமாதானம் பண்ணி சேர்ந்து வாழுங்க. அடுத்தவன மட்டும் கூப்புடாதீங்க.. கும்மி அடிச்சி, கதைய முடிச்சிருவாங்க..” என்று குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.