கமல்ஹாசனின் இந்தியன் 2 திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1996ஆம் ஆண்டு வெளியான இந்தியன் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக, நடிகர் கமல்ஹாசன் – இயக்குநர் சங்கர் கூட்டணி மீண்டும் இணைந்திருக்கும் திரைப்படம் இந்தியன் 2. இந்தியன் தாத்தாவாக கமல்ஹாசன் கலக்கிய முதல் பாகம், அவருக்கு தேசிய விருதைப் பெற்றுத் தந்தது. மேலும், வசூல் வேட்டை நடத்தி தமிழ் சினிமாவின் மிகப்பெரும் ஹிட் படங்களில் ஒன்றாகவும் உருவெடுத்தது.
இந்நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகத்துக்கான பணிகள் 2018ஆம் ஆண்டு தொடங்கி பல சிக்கல்கள், இடையூறுகளைக் கடந்து தற்போது கிட்டத்தட்ட நிறைவடையும் நிலையில், உள்ளது. காஜல் அகர்வால், சித்தார்த், பிரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா சமுத்திரக்கனி, குரு சோமசுந்தரம், ஜெயப்பிரகாஷ், கிஷோர், ஜி.மாரிமுத்து எனப் பெரும் நட்சத்திரப் பட்டாளமே இப்படத்தில் நடித்திருப்பதால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் எகிறி வருகின்றன.
இந்நிலையில், இந்தியன் 2 திரைப்படத்தின் ஷூட்டிங் விரைவில் நிறைவடைய உள்ளதாகவும், 2024ஆம் ஆண்டு பொங்கல் ரிலீசாக இப்படம் வெளியாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நீண்ட நாள்களாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வந்த இந்தியன் 2 படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் நடிகர் கமல்ஹாசன் ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. முன்னதாக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகை காஜல் அகர்வால், தனது இந்தியன் 2 பட கதாபாத்திரம் குறித்து மனம் திறந்துள்ளார். “இந்தியன் 2 படத்தில் தான் மிகவும் சுவாரஸ்யமான கதாபாத்திரத்தை செய்துள்ளேன். இது மிகவும் வித்தியாசமான கதாபாத்திரமாக இருக்கிறது. நான் இதுவரை ஒரு ரோலை செய்ததில்லை” எனப் பேசியுள்ளார்.