ரஜினிகாந்த் அடுத்ததாக நடிக்கவிருக்கும் ‘தலைவர் 170’ படத்தில் நடிகர் அர்ஜுன் வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் தற்போது இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கி வரும் ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், தமன்னா, விநாயகன், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். ‘ஜெயிலர்’ படம் ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இதற்கிடையே, லைகா தயாரிப்பில் உருவாகவுள்ள ‘தலைவர் 170’ படத்தை டி.ஜே.ஞானவேல் இயக்கவுள்ளார். இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் சார்பாக சுபாஷ்கரண் தயாரிக்கவுள்ளார். ‘ஜெய் பீம்’ படத்தின் மூலம் பெரும் வரவேற்பை பெற்ற ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தில் வில்லனாக நடிக்க விக்ரமிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியானது. ஆனால் வில்லனாக நடிக்க விக்ரம் மறுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தற்போது பிரபல நடிகர் அர்ஜுன் இந்தப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது விஜய்யின் ‘லியோ’ படத்தில் வில்லனாக நடித்து வரும் இவர், அடுத்ததாக ரஜினிக்கு வில்லனாக நடிக்கவுள்ளார். உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு போலி என்கவுண்டர் குறித்து பேசும் படமாக உருவாகவுள்ள ‘தலைவர் 170’ படத்தில் ரஜினி இஸ்லாமியராக நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.