பாலிவுட்டில் பல்வேறு பிளாக்பஸ்டர் படங்களில் நடித்தவரும், தமிழில் கமலின் ’ஹே ராம்’ படத்தில் பணியாற்றியவருமான நடிகர் அருண் பாலி காலமானார். அவருக்கு வயது 79.
பழம்பெரும் பாலிவுட் நடிகரான அருண் பாலி Myasthenia Gravis என்ற நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இது நரம்புகள் மற்றும் தசைகளுக்கு இடையேயான தொடர்பு செயலிழப்பால் ஏற்படும் ஒரு நோயாகும். இதற்காக அவர் இந்த ஆண்டின் தொடக்கத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை நன்றாக பலனளித்ததாக கூறப்படும் நிலையில், அதிகாலை 4.30 மணியளவில் காலமானார். அவரது மறைவு பாலிவுட் திரையுலகை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. ரசிகர்களும், பிரபலங்களும் அருண் பாலியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பாலிவுட்டில் பிளாக்பஸ்டர் ஹிட்டான அமீர்கானின் ’3 இடியட்ஸ்’ மற்றும் ஷாருக்கானின் ’ராம் ஜானே’ ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் அருண் பாலி நடித்திருந்தார். இதுதவிர இந்தி சீரியல்களிலும் நடித்து பாப்புலர் ஆன இவர், படங்களையும் தயாரித்திருக்கிறார். இவர் சிறந்த தயாரிப்பாளருக்கான தேசிய விருதையும் பெற்றுள்ளார். மேலும், கமல்ஹாசன் நடித்து இயக்கிய ’ஹே ராம்’ படத்தில் பெங்கால் முதலமைச்சர் கதாபாத்திரத்தில் அருண் பாலி நடித்திருந்தார். இந்நிலையில், அருண் பாலியின் இறுதிச்சடங்கு மும்பையில் நடைபெற உள்ளது. அவரது உடலுக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.