பிபி ஜோடியில் வெற்றி பெற்ற பின் இன்ஸ்டாகிராமில் அனைவருக்கும் நன்றி தெரிவித்து பதிவொன்றை வெளியிட்டுள்ள பாவனி, அதில், தனது காதலையும் சொல்லியிருக்கிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த பிக்பாஸ் ஜோடிகள் சீசன் 2 நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி கடந்த ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. இதில் ரசிகர்கள் எதிர்பார்த்தபடி பாவனி-அமீர் ஜோடி டைட்டிலை வென்றது. பிபி ஜோடிகளின் சீசன் 2-வில் ஆர்த்தி – கணேஷ், அபிஷேக் – நாடியா சங், சுஜா – சிவக்குமார், மற்றும் தாமரை – பார்த்தசாரதி ஆகிய நான்கு இறுதிப் போட்டியாளர்களுடன் இந்த ஜோடி போட்டியிட்டது.
பிபி ஜோடிகள் 2 டான்ஸ் ரியாலிட்டி ஷோவில் பாவனியும் அமீரும் தங்களின் அட்டகாசமான கெமிஸ்ட்ரியால் நெட்டிசன்களை கவர்ந்தனர். அமீர் மட்டுமல்ல, இந்த ஜோடியின் ஒட்டுமொத்த ரசிகர்களும் அமீரின் காதலை பாவனி ஏற்றுக்கொள்வார் என்று பொறுமையாகக் காத்திருந்தனர். தற்போது அது நடந்துள்ளது. ஆம்..! வெற்றி பெற்ற பின் இன்ஸ்டாகிராமில் அனைவருக்கும் நன்றி தெரிவித்து பதிவொன்றை வெளியிட்டிருக்கிறார் பாவனி. அதில், தனது காதலையும் சொல்லியிருக்கிறார்.
அந்த பதிவில், “அமீர் மாஸ்டர் உங்களைப் பற்றி சொல்ல வார்த்தைகள் இல்லை, நடனம் எனக்கு ஒரு பெரிய சவாலாக இருந்தது. அதுவும் ஒரு போட்டியில் அடியெடுத்து வைப்பது இன்னும் பயமாக இருந்தது. ஆனால், நீங்கள் சிறந்த மாஸ்டர் என்று நிரூபித்தீர்கள். நடனம் ஆடாத ஒருவரை நடனமாடவும், அவரை எப்படி வெற்றி பெற வைப்பது என்பதும் உங்களுக்கு தெரியும். இது உங்களுக்கு மிகப்பெரிய பணி என்று எனக்குத் தெரியும். மேலும், இது ஒரு அற்புதமான பயணம், இதன் ஒவ்வொரு தருணத்தையும் நான் நேசிப்பேன். உன்னை அதிகம் தெரிந்து கொண்டேன், உன்னிடமிருந்து பல புதிய விஷயங்களைக் கற்றுக்கொண்டேன், நேரம் பறந்து சென்றது.
நீங்கள் ஒரு சிறந்த மாஸ்டர், சிறந்த நடன பார்ட்னர். சிறந்த நண்பர். எனவே, இப்போது நாம் ஒன்றாக நமது வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்குவோம். என்னுடைய சிறந்த துணைவராக இருங்கள். அந்த நாளுக்காகக் காத்திருக்கிறேன் திரு அமீர், நீங்கள் என்றென்றும் என்னுடையவராக இருப்பீர்களா, ஐ லவ் யூ” என்று பதிவிட்டுள்ளார். இதனையடுத்து, ரசிகர்கள் ஒருவழியா பொண்ணு ஓகே சொல்லிடுச்சி என தெரிவித்து தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.