பிக்பாஸ் வீட்டிற்குள் புதிய போட்டியாளராக மைனா நந்தினி உள்ளே நுழைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி, வெற்றிகரமாக 5 சீசன்கள் முடிந்து தற்போது 6-வது சீசன் ஆரம்பமாகி உள்ளது. இந்த சீசனில் இதுவரை இல்லாத அளவு முதல் நாளே 20 போட்டியாளர்களை களமிறக்கி உள்ளார் பிக்பாஸ். இதில் 10 பெண்கள், 9 ஆண்கள் மற்றும் 1 திருநங்கை என மொத்தம் 20 பேர் பங்கேற்று உள்ளனர். அந்தவகையில், தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜி.பி.முத்து, பாடகர் அசல் கோலார், ராபர்ட் மாஸ்டர், திருநங்கை ஷிவின் கணேசன் , சாந்தி அரவிந்த், சீரியல் நடிகர் முகம்மது அஸீம், சீரியல் நடிகை ஆயிஷா, ஷெரின் ஷாம், மணிகண்ட ராஜேஷ், சரவணன் மீனாட்சி ரக்ஷிதா, ராம் ராமசாமி, பாடகர் தினேஷ் கனகரத்தினம் , விஜே மகேஸ்வரி, அமுதவாணன், நடனக் கலைஞர் மணிச்சந்திரா, விஜே கதிரவன், நடிகை குயின்ஸி, சிங்கப்பூர் மாடல் நிவாசினி, டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, விசிக மாநில செய்தி தொடர்பாளர் விக்ரமன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில், இந்நிகழ்ச்சி தொடங்கும் முன் வியூகங்கள் அடிப்படையில் ஏராளமான பிரபலங்களின் பெயர்களும் அடிபட்டன. அதில், பெரும்பாலானவர்களின் உத்தேச பட்டியலில் இடம்பெற்றிருந்த பெயர் என்றால் அது நடிகை மைனா நந்தினியின் பெயர் தான். ஆனால் அவர் பிக்பாஸ் துவக்க நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை. இதையடுத்து, மைனா நந்தினிக்கும் பிக்பாஸ் குழுவினருக்கும் ஏதேனும் பிரச்சனையா என்றெல்லாம் கேள்விகள் எழத்தொடங்கின. ஆனால் உண்மை என்னவென்றால், மைனா நந்தினியை சர்ப்ரைஸாக பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பி வைக்க திட்டமிட்டிருந்தனர்.

அதன்படி, தற்போது அவர் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான ஷூட்டிங் நடத்தப்பட்டுவிட்டதாகவும், இன்று கமல்ஹாசன் அவரை அறிமுகப்படுத்தி உள்ளே அனுப்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மைனாவின் வருகையால், பிக்பாஸ் வீடு கலகலப்பாக மாறலாம்.