திரைப்படலாசிரியர் சினேகன் மீது தேசிய மகளிர் ஆணையம் மற்றும் காவல் ஆணையரகத்தில் திரைப்பட நடிகை ஜெயலட்சுமி புகார் அளித்துள்ளார்.
திரைப்படலாசிரியர் சினேகன் கடந்த 5ஆம் தேதி, தனது சினேகம் தொண்டு நிறுவனப் பெயரை தவறாக பயன்படுத்தியதாக பாஜக நிர்வாகியும் நடிகையுமான ஜெயலட்சுமி மீது புகார் அளித்திருந்தார். இந்நிலையில், இன்று சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் சினேகன் மீது ஜெயலட்சுமி புகார் அளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஜெயலட்சுமி, “சினேகன் என்னை தவறாக சித்தரிக்கும் வகையில் பேசி உள்ளார். அவர் மீது புகார் அளித்துள்ளேன். பொதுவெளியில் அவமானப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு அவர் பேசி உள்ளார். அவர் என் மீது தவறான குற்றச்சாட்டை வைத்துள்ளார். அவர் எதையும் தெரிந்துப் பேச வேண்டும். என் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் சினேகன் பேசி உள்ளார்.
மேலும் பேசிய அவர், இது தொடர்பாக தேசிய மற்றும் மாநில மகளிர் ஆணையத்திலும் புகார் அளித்துள்ளதாகவும், அவரை நான் சும்மா விட மாட்டேன் என்றும் ஆவேசமாக கூறினார். சினேகன் பப்ளிசிட்டி தேடுவதற்காக என்னை அவமானப்படுத்தி பேசியுள்ளதாகவும், கடந்த 2018ஆம் ஆண்டு சட்டப்படி சினேகம் என்ற தொண்டு நிறுவனத்தைத் தொடங்கி மக்களுக்கு பல நற்செயல்களை செய்து வருவதாகவும் தெரிவித்தார். எந்த இடத்திலும் சினேகன் என்ற பெயரை பயன்படுத்தி நாங்கள் டொனேஷன் வாங்கவில்லை என்று கூறிய ஜெயலட்சுமி, தற்போது நடிகர் கமல்ஹாசனின் படத்தை திமுகவினர் தான் எடுத்து வருவதாகவும், மக்களை ஏமாற்றுவதற்காக திமுக தனிக்கட்சி என்று சொல்லுவதாகவும் கூறிய ஜெயலட்சுமி, மக்கள் நீதி மய்யம் திமுகவின் ’பி’ டீம் ஆக செயல்படுவதாகவும் குற்றம்சாட்டினார்.
அவர் ஒரு அரசியல் கட்சியை சேர்ந்தவர் என்பதால், அவர் வேண்டுமென்றே இது போன்று புகார் கொடுத்துள்ளதாகவும், அவர்கள் நண்பர்களிடம் இருந்து நான் பணம் பெற்றுள்ளதாக கூறியதை அவர் நிரூபிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார். அவர் எனக்கு அனுப்பிய நோட்டீஸ் ரிட்டனாகியது என்று சொல்லி இருக்கிறார். அந்த அட்ரஸ் என்னவென்று சொல்ல வேண்டும் என பேசிய அவர், சினேகன் திமுகவுக்கு விலை போய் விட்டாரா என்ற சந்தேகம் எழுவதாகவும் கூறினார். எந்த வகையில் அவருடைய பெயரை நான் தவறாக பயன்படுத்தினேன் என்று சினேகன் சொல்ல வேண்டும் என்றும், அவர் என் மீது ஆதாரம் இல்லாமல் புகார் கொடுத்துள்ளதாகவும் பேசிய ஜெயலட்சுமி, என் மீது எந்த புகாரும் இதுவரை இல்லை என்றும் ஆவேசமாக பேசினார்.