பொன்னியின் செல்வன் பாகம் 2-க்கான போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் மீண்டும் சில காட்சிகள் படம்பிடிக்கஇருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இரண்டாம் பாகத்திற்காக ஒரு சில காட்சிகள் படமாக்கப்பட வேண்டியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதற்காக ஒரு வாரம் முதல் அதிகபட்சமாக 10 நாட்கள் வரையில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு நடத்தப்படும் என்று கூறப்படுகிறது. விரைவில் இந்த காட்சிகளை மணிரத்னம் படமாக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோன்று இரண்டாம் பாகத்திற்கான கிராஃபிக்ஸ் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. இந்த படத்தை அடுத்த ஆண்டு ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் வரலாறு காணாத வெற்றியை கோலிவுட்டில் பதிவு செய்துள்ள நிலையில் அடுத்த பாகத்திற்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.முதல் பாகம் ரூ. 500 கோடிக்கும் அதிகமாக வசூலித்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதையடுத்து அடுத்த பாகத்தை வெளியிடும் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன.
கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக கொண்டு, அதனை படமாக இயக்குனர் மணிரத்னம் உருவாக்கியுள்ளார். 2 பாகங்களாக பொன்னியின் செல்வன் படமாக்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் படப்பிடிப்பை முடித்ததுடன், சினிமா ரசிகர்கள் ரசிக்கும்படியான படத்தை தந்த மணிரத்னம் மற்றும் படக்குழுவினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
இந்த படத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரம், குந்தவையாக த்ரிஷா, பொன்னியின் செல்வனாக ஜெயம் ரவி, நந்தினியாக ஐஸ்வர்யா ராய், வந்திய தேவனாக கார்த்தி உள்ளிட்டோர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தனர்.