நடிகர் ரஜினிகாந்த், தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் புதிய படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கவுள்ள நிலையில், அவர் இதுவரை கெஸ்ட் ரோலில் நடித்துள்ளப் படங்களின் விவரங்களைப் பார்க்கலாம்.
‘3’, ‘வை ராஜா வை’ உள்ளிட்டப் படங்களைத் தொடர்ந்து ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் படம் ‘லால் சலாம்’. இந்தப் படத்தில் லீட் ரோலில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. மேலும், இந்தப் படத்தில் ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது ரஜினிகாந்த், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கான படப்பிடிப்புகள் விரைவில் முடிவடைய உள்ளது. இந்நிலையில், சிறப்புத் தோற்றத்தில் ‘லால் சலாம்’ படத்தில் நடிக்க ரஜினிகாந்த் ஒப்பந்தமாகியுள்ளார். 70 வயதை நெருங்கும் ரஜினிகாந்த், கடந்த 1975ஆம் ஆண்டு முதல் நடித்து வருகிறார். அவர் திரைத்துறையில் நடிக்க ஆரம்பித்து 50 ஆண்டுகள் நெருங்கவுள்ள நிலையில், இன்றளவும் அவருக்கு மாஸ் குறையவே இல்லை. தற்போது அவர் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ள படங்களைப் பற்றி பார்க்கலாம்.
1. Aame Katha (தெலுங்கு)
கே.ராகவேந்திரா ராவ் இயக்கத்தில் 1977ஆம் ஆண்டு வெளியான ‘Aame Katha’ என்ற தெலுங்குப் படத்தில் தான் முதன்முதலாக நடிகர் ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார்.
2. பாவத்தின் சம்பளம்
துரை இயக்கத்தில் முத்துராமன், பிரமீளா, சுமித்ரா ஆகியோர் நடிப்பில் கடந்த 1978ஆம் ஆண்டு வெளியான தமிழ் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார்.
3. தாயில்லாமல் நான் இல்லை
தியாகராஜன் இயக்கத்தில், கமல்ஹாசன், ஸ்ரீதேவி நடிப்பில் கடந்த 1979ஆம் ஆண்டு வெளியான ‘தாயில்லாமல் நான் இல்லை’ படத்தில் நாகேஷ் மற்றும் ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் வந்திருந்தனர். இந்தப் படம் மெகா ஹிட் அடித்தது.
4. நட்சத்திரம்
1978இல் வெளியான தெலுங்குப் படமான ‘சிவரஞ்சனி’ படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் தான் ‘நட்சத்திரம்’. இந்தப் படத்தை தசரி நாராயணராவ் இயக்கியிருந்தார். 1980இல் தமிழில் வெளியான இந்தப் படத்தில் ஸ்ரீப்ரியா லீட் ரோலில் நடித்திருந்தார். சிவாஜி கணேசன், கமல்ஹாசன், ரஜினிகாந்த், சாவித்ரி, கே.ஆர்.விஜயா, மஞ்சுளா விஜயகுமார், ஸ்ரீவித்யா ஆகியோர் கௌரவ தோற்றத்தில் நடித்திருந்தனர்.
5. நன்றி மீண்டும் வருக
மௌலி இயக்கத்தில் பிரதாப் போத்தன், சுஹாசினி, ஜெய்சங்கர் நடிப்பில் 1982-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘நன்றி மீண்டும் வருக’. இந்தப் படத்தில் ரஜினிகாந்த், ஜெயசித்ரா, ராதிகா, பூர்ணிமா ஜெயராம், சாருஹாசன், தேங்காய் ஸ்ரீனிவாசன், சில்க் ஸ்மிதா ஆகியோர் சிறப்புத் தோற்றத்தில் வந்திருந்தனர்.
6. அக்னி சாட்சி
கே. பாலசந்தர் இயக்கத்தில் சிவக்குமார், சரிதா நடிப்பில் கடந்த 1982ஆம் ஆண்டு வெளியான ‘அக்னி சாட்சி’ படத்தில் ரஜினிகாந்த், கமல்ஹசான், லதா ரஜினிகாந்த், சீமா ஆகியோர் கௌரவ வேடம் ஏற்றிருந்தனர்.
7. உருவங்கள் மாறலாம்
எஸ்.வி. ரமணன் இயக்கத்தில் ஒய் ஜி மகேந்திரன் – சுஹாசினி நடித்து கடந்த 1983ஆம் ஆண்டு வெளியான ‘உருவங்கள் மாறலாம்’ படத்தில், சிவாஜி கணேசன், கமல்ஹாசன், ரஜினிகாந்த், ஜெய்சங்கர், மனோரமா ஆகியோர் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தனர்.
8. Nyayam Meere Cheppali (தெலுங்கு)
சுமன் – ஜெயசுதா நடிப்பில் கடந்த 1985-ம் ஆண்டு வெளியான ‘Nyayam Meere Cheppali’ என்ற தெலுங்குப் படத்தில் இன்ஸ்பெக்டராக சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார் நடிகர் ரஜினிகாந்த்.
9. Geraftaar (இந்தி)
அமிதாப் பச்சன், கமல்ஹாசன், மாதவி, பூனம் தில்லன் ஆகியோர் நடிப்பில் 1985ஆம் ஆண்டு வெளியான ‘Geraftaar’ என்ற இந்திப் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார்.
10. யார்? (தமிழ்)
1985-ம் ஆண்டு அர்ஜூன், நளினி, ஜெய்சங்கர் நடிப்பில் வெளியான யார்? என்ற திரைப்படத்தில், ரஜினிகாந்த் கௌரவத் தோற்றத்தில் நடித்திருந்தார்.
11. கோடை மழை (தமிழ்)
வித்யாஸ்ரீ, லக்ஷ்மி, ஜெய்சங்கர், ஸ்ரீப்ரியா ஆகியோர் நடிப்பில் கடந்த 1986-ம் ஆண்டு வெளியான ‘கோடை மழை’ படத்தில், ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் வந்திருந்தார்.
12. Daku Hasina (இந்தி)
ஜுனத் அமன், ராகேஷ் ரோஷன் ஆகியோர் நடிப்பில், அசோக் ராவ் இயக்கத்தில் கடந்த 1987-ம் ஆண்டு வெளியான ‘Daku Hasina’ படத்தில் மங்கள் சிங் என்ற கதாபாத்திரத்தில் கேமியோ செய்திருந்தார்.
13. மனதில் உறுதி வேண்டும் (தமிழ்)
கடந்த 1987-ம் ஆண்டு கே. பாலச்சந்தர் இயக்கத்தில், சுஹாசினி நடிப்பில் வெளியான ‘மனதில் உறுதி வேண்டும்’ படத்தில், ‘வங்காள கடலே’ பாடலில் விஜயகாந்த், ரஜினிகாந்த், சத்யராஜ் ஆகியோர் நடனமாடியிருந்தனர்.
14. Gair Kanooni (இந்தி)
கோவிந்தா, ஸ்ரீதேவி நடிப்பில், பிரயக் ராஜ் இயக்கத்தில் கடந்த 1989-ம் ஆண்டு வெளியான ‘Gair Kanooni’ இந்திப் படத்தில், சசி கபூர் மற்றும் ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தனர். மேலும் இந்தப் படத்தில் இரட்டை கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்திருந்தார்.
15. Bhrashtachar (இந்தி)
மிதுன் சக்ரவர்த்தி, ரேகா, அனுபம் கெர் நடிப்பில் கடந்த 1989இல் வெளியான ‘Bhrashtachar’ என்ற இந்திப் படத்தில் அப்துல் என்ற கதாபாத்திரத்தில் சிறப்புத் தோற்றத்தில் ரஜினிகாந்த் தோன்றியிருந்தார்.
16. பெரிய இடத்துப் பிள்ளை (தமிழ்)
மீண்டும் அர்ஜூன் மற்றும் கனகா நடிப்பில், செந்தில்நாதன் இயக்கத்தில் கடந்த 1990இல் வெளியானப் படத்தில் ரஜினிகாந்த் அவராகவே சிறப்புத் தோற்றத்தில் வந்திருந்தார்.
17. வள்ளி (தமிழ்)
கடந்த 1993இல் வெளியான ‘வள்ளி’ திரைப்படத்தில் திரைக்கதை எழுதி தயாரித்திருந்த நடிகர் ரஜினிகாந்த், அந்தப் படத்தில் வீரையா என்ற கதாபாத்திரத்தில் சிறு நீண்ட நெடிய சிறப்புத் தோற்றத்தில் வந்திருந்தார்.
18. Pedarayudu (தெலுங்கு)
தமிழில் பிளாக் பஸ்டர் ஹிட் அடித்த ‘நாட்டாமை’ படத்தின் தெலுங்கு ரீமேக்கான ‘Pedarayudu’ கடந்த 1995-ம் ஆண்டு வெளியானது. இந்தப் படத்தில் தமிழில் விஜயகுமார் செய்த கதாபாத்திரத்தில் தெலுங்கில் ரஜினிகாந்த் நடித்திருந்தார்.
19. Bhagya Debata (பெங்காலி)
மீண்டும் மிதுன் சக்ரவர்த்தி நடிப்பில், ரகுராம் இயக்கத்தில் கடந்த 1995இல் வெளியான ‘Bhagya Debata’ என்ற பெங்காலி படத்தில் பாடகராக சிறப்புத் தோற்றத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்திருந்தார்.
20. Bulandi (இந்தி)
அனில்கபூர், ரேகா ஆகியோர் நடிப்பில், கடந்த 2000-ம் ஆண்டு இந்தியில் வெளியான ‘Bulandi’ என்றப் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்திருந்தார்.
21. குசேலன் (தமிழ், தெலுங்கு)
கடந்த 2008ஆம் ஆண்டு பசுபதி, மீனா, வடிவேலு ஆகியோர் நடிப்பில் பி. வாசு இயக்கத்தில் வெளியான ‘குசேலன்’ படத்தில் நடிகராக ரஜினிகாந்த் நடித்திருந்தார். தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இருமொழிகளில் இந்த படம் வெளியாகியிருந்தது.
22. ரா ஒன் (இந்தி)
கடந்த 2011ஆம் ஆண்டு ஷாரூக்கான், கரீனா கபூர், அர்ஜூன் ராம்பால் நடிப்பில் வெளியான படத்தில், சிட்டி என்ற ரோபோ கதாபாத்திரத்தில் சிறப்புத்தோற்றத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்திருந்தார்.
பெரும்பாலான படங்களில் ரஜினியாகவும், போலீஸ் அதிகாரியாகவும் சிறப்புத் தோற்றத்தில் வந்த ரஜினிகாந்த், அதன்பிறகு கேமியோ ரோலில் எந்தப் படத்திலும் நடிக்காத நிலையில், தனது மகள் இயக்கும் ‘லால் சலாம்’ படத்தில் கௌரவ வேடத்தில் நடிக்க உள்ளார். இதில், அவருக்கு என்ன கதாபாத்திரம் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர்.