45 வயதாகும் சினிமா நடிகை பிரகதி, விரைவில் மறுமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல இயக்குனரும், நடிகருமான கே.பாக்யராஜ் 1994ஆம் ஆண்டு இயக்கி நடித்த ‘வீட்ல விசேஷங்க’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பிரகதி. இவர், தமிழில் சுமார் 20 படங்களில் நடித்துள்ள நிலையில், தெலுங்கு திரையுலகில் தான் அதிகம் நடித்துள்ளார். மலையாளத்தை பொறுத்தவரை ஒரு சில படங்களில் மட்டுமே நடித்துள்ளார். இவர் திரையுலகில் அறிமுமான, சில வருடங்களிலேயே இன்ஜினீயர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால், சில வருடங்களிலேயே கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்தும் பெற்றார். விவாகரத்துக்கு பின்னர், தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் அக்கா, அண்ணி, அம்மா போன்ற குணச்சித்திர வேடங்களில் கவனம் செலுத்தி வரும், பிரகதி சில சீரியல்களிலும் நடித்து வருகிறார்.
அந்த வகையில், சன் டிவியில் ஒளிபரப்பான பெண், வம்சம் மற்றும் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘அரண்மனை கிளி’ போன்ற சீரியல்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டும் இன்றி, தெலுங்கு மற்றும் மலையாள சீரியல்களிலும் நடித்துள்ளார். சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவர், அவ்வப்போது தன்னுடைய ஃபிட்னஸ் வீடியோக்களை சமூக வலைதள பக்கத்தில் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
தற்போது 45 வயதாகும் இவர், விரைவில் மறுமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியான நிலையில், இதற்கு விளக்கம் கொடுத்துள்ள அவர், மறுமணம் குறித்து இதுவரை யோசித்தது கூட இல்லை. தற்போது தன்னுடைய ஃபிட்னஸ், நடிப்பு மற்றும் தன்னுடைய 2 மகன்களை கவனிப்பதில் மட்டுமே ஆர்வம் செலுத்த உள்ளதாக கூறியுள்ளார்.