பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள ஜி.பி. முத்துவை சக போட்டியாளர்கள் சீண்டிப் பார்க்க தொடங்கியுள்ள நிலையில், அவரது ரசிகர்கள் மத்தியில் கடுப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் டிவியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் நேற்று தொடங்கியது. இதில், நேற்று தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜி.பி.முத்து, பாடகர் அசல் கோலார், ராபர்ட் மாஸ்டர், திருநங்கை ஷிவின் கணேசன் , சாந்தி அரவிந்த், சீரியல் நடிகர் முகம்மது அஸீம், சீரியல் நடிகை ஆயிஷா, ஷெரின் ஷாம், மணிகண்ட ராஜேஷ், சரவணன் மீனாட்சி ரக்ஷிதா, ராம் ராமசாமி, பாடகர் தினேஷ் கனகரத்தினம் , விஜே மகேஸ்வரி, அமுதவாணன், நடனக் கலைஞர் மணிச்சந்திரா, விஜே கதிரவன், நடிகை குயின்ஸி, சிங்கப்பூர் மாடல் நிவாசினி, டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, விசிக மாநில செய்தி தொடர்பாளர் விக்ரமன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
இதில், சமூகவலைத்தளம் மூலம் தனது வட்டார வழக்கு வசை சொற்களால் பிரபலமான ஜிபி முத்து, முதல் போட்டியாளராக களமிறங்கினார். சொல்லப்போனால் இந்த பிக்பாஸ் சீசன் இவருக்காகவே பார்ப்பவர்கள் ஏராளம். சமூக வலைத்தளம் முழுக்க ஜிபி முத்து தான் பேசுபொருளாக உள்ளார். நிகழ்ச்சி உள்ளே சென்றதும் கமலை கலாய்த்தது, மாடர்ன் ட்ரெஸ் போட்டு வந்தவர்களை பார்த்து சேலை கட்டிய யாரும் வரமாட்டாங்களா? என கேட்டது என்று தனியொரு மனிதனாகவே ஜிபி முத்து ஜொலிக்கிறார்.
ஒருபக்கம் இவரை பகைத்தால் நாம் வெளியே போவது நிச்சயம் என்னும் அளவுக்கு சக போட்டியாளர்கள் கொஞ்சம் உஷாராகவே நடந்துக் கொள்ளும் நிலையில், மறுபக்கம் சீண்டி பார்க்கும் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது. அதில், ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில் நள்ளிரவில் தூங்கி கொண்டிருக்கும் ஜிபி முத்துவை ராபர்ட் மாஸ்டர் பதுங்கிச் சென்று அவரது காலின் அடிபாதத்தை சீண்டுகிறார். இதனால் கூச்சம் ஏற்பட்டு திடுக்கிட்டு எழும் ஜிபி முத்து, பெட்டில் இருந்து கீழே விழுகிறார். சக போட்டியாளர்கள் அதைப் பார்த்து சிரிக்கின்றனர். பின்னர் வந்து தூக்கி விட்டு கட்டிப்பிடித்து ஆறுதல் சொல்கின்றனர். இந்த சம்பவத்தை ஜிபி முத்து சிரித்தப்படியே கடந்து செல்கிறார்.