அசத்தப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் ஸ்டாண்ட் அப் காமெடியனாக, ரசிகர்களால் நன்கு அறியப்பட்டவர் ரோபோ சங்கர். இதை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம், இவரின் காமெடி மற்றும் மிமிக்கிரி திறமை பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது. ஆரம்பத்தில் சில திரைப்படங்களில், கூட்டத்தோடு கூட்டமாக வந்து செல்லும் கதாபாத்திரத்தில் நடித்த இவர், பின்னர் தனுஷ், ரஜினிகாந்த், கார்த்தி, அஜித், சூர்யா போன்ற பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.
இந்நிலையில் சமீபத்தில் இவர், மஞ்சள் காமாலை பிரச்சனையால் பாதிக்கப்பட்டு மிகவும் ஒல்லியாக மாறிய புகைப்படம் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் உறைய வைத்தது. ஒருவழியாக உடல் நலம் தேறி மீண்டும், திரைப்படங்கள் மற்றும் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள துவங்கியுள்ளார். அவ்வப்போது இவரது புகைப்படங்களும் வெளியாகி வருகிறது. ரோபோ சங்கர் எந்த அளவுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமோ அதே அளவிற்கு, அவர் மனைவி ப்ரியங்கா மற்றும் மகள் இந்திரஜாவும் மிகவும் பிரபலமானவர்கள்.
இந்திரஜா தன்னுடைய 16 வயதிலேயே அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த, ‘பிகில்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதே போல் சமீபத்தில் கார்த்தி – அதிதி ஷங்கர் நடிப்பில் வெளியான ‘விருமன்’ படத்திலும் சூரிக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்நிலையில், விரைவில் இந்திரஜாவுக்கு திருமணம் நடைபெற உள்ள தகவலை அவரே, உறுதிபடுத்தியுள்ளார். சமீபத்தில் இந்திரஜா தன்னுடைய பெற்றோர் மற்றும் முறைமாமன் குடும்பத்தினரோடு குலதெய்வ கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு வந்துள்ளனர்.
அப்போது தன்னுடைய மாமாவின் பக்கத்தில் வெக்க புன்னகை சிதற இந்திரஜா போஸ் கொடுத்திருந்தார். இதை பார்த்த ரசிகர்கள் பலர் உங்களின் ஜோடி பொருத்தம் அருமை என்றும், இருவரும் திருமணம் செய்து கொள்ள போகிறீர்களா என கேள்வி எழுப்பி வந்தனர். இதற்கு பதிலளித்த இந்திரஜா ஆமாம். முடிவு செய்துள்ளார்கள். ஆனால், இன்னும் திருமணத்திற்கு நாள் குறிக்கவில்லை என தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருவதோடு, பலருக்கும் இந்திரஜாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.