தமிழில், குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பல படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த சரண்யா நாக், இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் கடந்த 2004இல் வெளியான ‘காதல்’ படத்தில் சந்தியா நடிக்க இருந்த கதாபாத்திரத்தில், முதலில் நடிக்க தேர்வானவர். ஒரு சில காரணங்களால் சந்தியா ஹீரோயின் ஆக மாற, சரண்யா நாக் அவருக்கு தோழியாக நடித்திருந்தார். இதை தொடர்ந்து, சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, துள்ளுற வயசு, பேராண்மை உள்ளிட்ட இருபதிற்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார்.
தமிழை தாண்டி தெலுங்கு மொழி படங்கள் சில வற்றில் நடித்த போதும், இவரால் திரையுலகில் நிலைக்க முடியவில்லை. இவர் நடித்த படங்கள் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்தது. எனவே, திரை உலகில் இருந்து விலகிய சரண்யா, கடந்த சில வருடங்களாக எங்கிருக்கிறார் என தேடும் நிலை ஏற்பட்டது. திரைப்படங்களில் நடிக்காவிட்டாலும், சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருந்து வரும் சரண்யா, தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் கருத்துக்களை தொடர்ந்து வெளியிட்டு வந்தார்.
இந்நிலையில், சரண்யா நாக் சமீபத்தில் கொடுத்துள்ள பேட்டி ஒன்றில் பல அதிர்ச்சி தகவல்களை கூறியிருக்கிறார். தன்னுடைய வாழ்க்கையில் நடந்த பாலியல் தொல்லை மற்றும் தற்கொலை முயற்சி குறித்து பேசியுள்ளார். ”சரண்யா நாக் குழந்தை பருவத்தில் இருந்தே, அக்கம் பக்கத்தில் உள்ள சிலர் மூலம் பாலியல் தொல்லையை அனுபவித்துள்ளார். அந்த வயதில் அதை தடுக்கும் தைரியம் தனக்கு இல்லை என்றும், இதுகுறித்து அம்மாவிடமும் சொல்ல முடியாத நிலையில் இருந்துள்ளார். காரணம் அவருடைய அம்மாவுக்கும் இதே போன்ற நிலை என்று கூறியுள்ளது தான் அதிர்ச்சியின் உச்சம்.
இதுபோன்ற பிரச்சனைகள் தனக்கு ஓரிரு நாட்கள் நடக்கவில்லை 27 வயது வரைக்கும் இது போன்ற ஆண்களை தான் நான் சந்தித்தேன். சிலர் என்னுடைய நிதி நிலையை பார்த்தார்களே தவிர, என்னுடைய நிலைமை பார்த்ததில்லை. தன்னை பற்றியும் தன்னுடைய தாயை பற்றியும் குறை சொல்பவர்கள், பலருக்கு எங்களுடைய வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எனினும் என்னுடைய வாழ்க்கையில் ஏதேனும் ஒரு அதிசயம் நடக்கும் என்கிற நம்பிக்கை இருந்தது. என் நம்பிக்கைக்கு ஏற்றாப்போல் சில நண்பர்கள் எனக்கு கிடைத்தார்கள். அவர்கள் இதுபோன்ற பிரச்சனையில் இருந்து என்னை மீட்டு கொண்டு வந்தார்கள்.
அதேபோல் 2020இல் வைதேகி என்கிற பத்திரிகையாளர் தன்னை தொடர்பு கொண்டு பேசியபோது, அதுவே என் வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு பிள்ளையார் சுழியாக அமைந்தது. அவரின் நம்பிக்கையான பேச்சுக்கு பிறகே புஷ்காரா ப்ரொடக்ஷன் என்கிற நிறுவனத்தை நான் தொடங்கினேன். மேலும், என் கஷ்டங்களில் இருந்து விடைபெற 2 முறை தற்கொலைக்கும் முயற்சி செய்துள்ளேன். இப்போது நினைத்தாலும் அது அசிங்கமாக இருக்கிறது. பின்னர் எதற்கு நான் சாக வேண்டுமென யோசித்து அந்த முட்டாள் தனமான முடிவை தூக்கி போட்டுவிட்டு வெளியேறினேன்.
வாழ்வதற்கான தைரியம் என்னிடம் இருந்தது. சாவதற்கு அதைவிட அதிக தைரியம் தேவை என நினைக்கிறேன். பல விதமான கஷ்டத்தில் சிக்கி மீண்டு வெளியே வந்திருந்தாலும், எப்போதும் என்னுடைய சிரிப்பு மட்டும் எந்த நிலையிலும் மாறவில்லை. எனவே, உங்களுடைய வாழ்க்கையிலும் இறுக்கமாக நீங்கள் உணர்ந்தால், அதை தூக்கி எரிந்து விடுங்கள் உங்களுடைய வாழ்க்கையும் சிறப்பானதாக அழகானதாக கண்டிப்பாக மாறும்” என்று தெரிவித்திருக்கிறார்.