நடிகை ரம்பாவின் கார் விபத்துக்குள்ளானதில் அவருடைய இளைய மகள் சாஷா படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
90’ஸ் களில் ரசிகர்களின் கனவுக்கன்னியாக இருந்தவர் நடிகை ரம்பா. உழவன் படத்தில் பிரபுவிற்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்த ரம்பாவிற்கு சுந்தர் சி யின் உள்ளத்தை அள்ளித்தா படம் சிறப்பாக கைக்கொடுத்தது. இந்த படத்தில் உடையை காற்றில் பறக்கவிட்டு, தொடையழகை காட்டி அழகிய லைலா பாடலுக்கு டான்ஸ் ஆடி ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன் பக்கம் திருப்பினார். இத்திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு ரஜினிகாந்துடன் அருணாச்சலம், கமலுடன் காதலா காதலா, விஜயுடன் நினைத்தேன் வந்தாய், விஜய்காந்த், அர்ஜுன், அஜித் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து முன்னணி நடிகையாக மாறினார். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், இந்தி படங்களிலும் நடித்துள்ளார்.
படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருந்த ரம்பா, கடந்த 2010ஆம் ஆண்டில் காதல் திருமணம் செய்துக் கொண்டு வெளிநாட்டில் செட்டிலானார். இவர்களுக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் இருக்கிறார்கள். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ரம்பா, அவ்வப்போது குழந்தைகளும் இருக்கும் போட்டோவை ஷேர் செய்வார். மீனாவின் கணவர் உயிரிழந்த நிலையில், வெளிநாட்டில் இருந்து வந்து மீனாவுக்கு ஆறுதல் கூறியிருந்தார்.
இந்நிலையில், நடிகை ரம்பா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கார் விபத்துக்குள்ளான வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், ”பள்ளியிலிருந்து குழந்தைகளை அழைத்துச் செல்லும் வழியில் எனது கார் மற்றொரு கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் குழந்தைகளுடன் நான் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினேன். நாங்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறோம். நானும் என் ஆயாவும் சிறு காயங்களுடன் சிகிச்சை முடிந்து மீண்டுவிட்டோம். ஆனால், என் குட்டி மகள் சாஷா இன்னும் மருத்துவமனையில் இருக்கிறார்” என பதிவிட்டுள்ளார்.
ரம்பாவின் இந்த பதிவினைப் பார்த்து பதறிப்போன ரசிகர்கள் நலம் விசாரித்து வருகின்றனர். மேலும், குழந்தைக்கு ஒன்றும் ஆகாது பயப்படாமல் இருங்கள் என்று பலரும் ரம்பாவுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். நடிகை ரம்பாவின் கார் விபத்துக்குள்ளான செய்தி காட்டுத்தீ போல இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.