வி.ஜே.சித்ராவின் மரண வழக்கில் தொகுப்பாளர் ரக்ஷனுக்கும் தொடர்பு இருப்பதாக கணவர் ஹேமந்த் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம் சித்ராவை யாராலும் மறக்க முடியாது. தான் வாழ்ந்த கடைசி நாட்களில் முல்லை என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் சித்ரா. இவருடைய மரணம் இன்றும் யாராலும் நம்பவும் முடியவில்லை, ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை. அந்த அளவிற்கு ரசிகர்கள் முதல் சின்னத்திரை பிரபலங்கள் வரை பாதித்த ஒன்று. இவர் சாதாரண குடும்பத்தில் பிறந்து தன்னுடைய கடும் உழைப்பினாலும், விடா முயற்சியினாலும் இந்த அளவிற்கு உயர்ந்து மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார். விஜய் டிவியில் ஒரு நிகழ்ச்சிக்கு பார்வையாளராக வந்த இவர் அதே சேனலில் பிரபலமான சீரியலில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். இப்படி தனக்கென உச்சத்தில் இருந்த சித்ரா தூக்கிட்டு மர்மமான முறையில் இறந்த சம்பவம் பலருக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. சித்ரா சீரியல் ஷூட்டிங்குக்காக பூந்தமல்லி அருகே பெங்களூரு பைபாஸ் சாலையில் உள்ள ஹோட்டலில் தனது கணவர் ஹேமநாத்துடன் தங்கியிருந்தார்.

அப்போது அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட நிலையில், சடலமாக மீட்கப்பட்டார். இவர் தற்கொலைக்கு முழுக்க முழுக்க காரணம் அவர் கணவர் ஹேமநாத் தான் என்று சித்ராவின் பெற்றோர்கள் புகார் அளித்து இருந்ததால் ஹேம்நாத்தை போலீஸ் கைது செய்து இருந்தது. அதன் பின் அவர் ஜாமீனில் வெளியே வந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. சித்ரா இறந்து ஒரு ஆண்டு முடிந்துவிட்டது. ஆனால், இவருடைய மரணத்திற்கு காரணம் என்ன? தற்கொலையா? கொலையா? என்று இன்னும் விடை தெரியாமல் இருக்கின்றது.

கடந்த சில மாதங்களாக இந்த விவகாரம் குறித்து பேசாமல் இருந்து வந்த ஹேமந்த், தற்போது மீண்டும் பேட்டிகளைக் கொடுக்கத் தொடங்கி உள்ளார். அந்த வகையில் சமீபத்தில் தனியார் செய்தி சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், சித்ராவின் மரணத்திற்கு காரணமானவர்கள் யார் என்கிற பகீர் தகவலை வெளியிட்டு இருக்கிறார். அந்த வகையில், விஜய் டிவி தொகுப்பாளர் ரக்ஷனுக்கும், அண்ணாநகரில் மெஸ் நடத்தி வரும் குறிஞ்சி செல்வனுக்கும் தொடர்பு இருப்பதாக தெரிவித்துள்ளார். இருவரும் சித்ராவுக்கு பல வகைகளில் தொந்தரவு கொடுத்ததாக கூறியுள்ள ஹேமந்த், இதற்கான ஆதாரங்கள் அனைத்தும் சித்ராவின் ஆண் நண்பரான ரோஹித்திடம் இருப்பதாக கூறியுள்ளார்.

தான் சிறையில் இருந்து வெளியில் வந்ததும் சித்ராவின் மரணத்திற்கு காரணமானவர்கள் குறித்து தன்னிடம் ரோஹித் பல திடுக்கிடும் தகவல்களை பகிர்ந்துகொண்டதாகவும், சித்ராவின் மரணத்தில் ரக்ஷனுக்கும் குறிஞ்சி செல்வனை தவிர வேறு யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என்பதும் ரோஹித்திற்கு தெரியும் எனக்கூறிய ஹேமந்த், சித்ராவிற்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதா அல்லது பணத்தொல்லை கொடுக்கப்பட்டதா என்பது குறித்த தகவலை வெளியிடவில்லை.