தங்களுக்கு பிடித்தமான ஹீரோக்கள் தாலி கட்டி மேடையில் தற்போது பொதுமக்களும் தங்களது திருமணத்தை நடத்திக் கொள்ளலாம் என ஏவிஎம் ஸ்டூடியோ தெரிவித்துள்ளது.
சென்னைக்கு சினிமா ஆசையுடன் வரும் அனைத்து இளைஞர்களும் படையெடுக்கும் முதல் இடம் ஏவிஎம் கார்டன் ஸ்டூடியோ என்றால் அது மிகையாகாது. அந்த வகையில், அனைவருக்கும் முக்கியமான ஸ்டூடியோவாக இருக்கும் ஏவிஎம் ஸ்டூடியோவின் உலக உருண்டை அனைவரையும் கவர்ந்து வருகிறது. தற்போது வெளிநாடுகளில் மட்டுமில்லாமல் இந்தியாவிலேயே பல இடங்களில் செட் போட்டு படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர். இவை அனைத்திற்கும் முன்னோடியாக காணப்படுவது ஏவிஎம் ஸ்டூடியோதான்.
சிவாஜி, எம்ஜிஆர், ரஜினி, கமல் என முன்னணி நடிகர்கள் இந்த ஸ்டூடியோவில் நடத்தப்பட்ட பல படங்களில் நடித்துள்ளனர். 60 ஆண்டுகாலங்களாக தென்னிந்திய சினிமாவின் களங்கரை விளக்கமாக அமைந்துள்ள ஏவிஎம் ஸ்டூடியோ ஒட்டுமொத்த தமிழ் திரையுலகின் அடையாளமாகவும் உள்ளது. இந்தியாவின் மிகவும் பழமையான மற்றும் இன்றும் இயக்கத்தில் உள்ள படத்தயாரிப்பு கூடம் ஏவிஎம் கார்டன் ஸ்டூடியோஸ் தற்போது திருமண மண்டபமாக மாறியுள்ளது. இந்த ஸ்டூடியோவில் எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல் என முன்னணி நடிகர்கள் பலரும் படத்திற்காக தாலி கட்டிய தருணங்கள் சிறப்பாக அமைந்தது. அந்த தருணங்களை படங்களில் பார்த்து அவர்களது ரசிகர்கள் உற்சாகமடைந்த சூழல் இருந்தது.
இந்நிலையில், தங்களுக்கு பிடித்தமான ஹீரோக்கள் தாலி கட்டி மேடையில் தற்போது பொதுமக்களும் தங்களது திருமணத்தை நடத்திக் கொள்ளலாம். தற்போது வெளிநாடுகளில் அதிகமான படப்பிடிப்புகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், இந்த ஸ்டூடியோவிற்குள் செல்லும்போது பல ஹீரோக்களின் முன்னணி படங்களின் சூட்டிங் மற்றும் பாடல் சூட்டிங்தான் அனைவரது நினைவிற்கும் வரும். இதே போல இங்கு செயல்பட்டு வரும் டப்பிங் ஸ்டூடியோவில் டப்பிங் பேசாத பிரபலங்களும் இருக்க முடியாது. இத்தகைய பல்வேறு இனிமையான தருணங்களின் சாட்சியாக இருந்துவரும் ஏவிஎம் ஸ்டூடியோவில் இனி நடிகர்கள் மட்டுமில்லாமல் பொதுமக்களும் தங்களது திருமணங்களை நடத்திக் கொள்ளலாம் என்பது கண்டிப்பாக சிறப்பான செய்தியாகவே காணப்படுகிறது.