இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் இறுதியாக விடுதலை என்னும் திரைப்படம் வெளியாகியிருந்தது. இப்படத்தில் சூரி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இவருடன் விஜய் சேதுபதி, பவானிஸ்ரீ, சேத்தன் உள்ளிட்டவர்களும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்தப் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு உள்ளான நிலையில், ரசிகர்களை ஏமாற்றவில்லை. படத்தில் அதிரடி கதைக்களம் மற்றும் காட்சி அமைப்புகளை சரியாக பயன்படுத்தியிருந்தார் வெற்றிமாறன்.
இந்தப் படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளதாக முன்னதாகவே அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது படத்தின் 2ஆம் பாகத்திற்கான வேலைகளில் வெற்றிமாறன் ஈடுபட்டுள்ளார். படத்தின் சூட்டிங் முன்னதாகவே முடிக்கப்பட்ட நிலையில், அதில் சில சேர்ப்புப் பணிகளை வெற்றிமாறன் மேற்கொண்டுள்ளார். இந்தப் படம் அடுத்த ஆண்டு துவக்கத்தில் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையே, வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து வரும் திரைப்படம் தான் வாடிவாசல். இந்தப் படத்தின் சூட்டிங் தொடர்ந்து தள்ளிப் போவதால் ரசிகர்கள் ஏமாற்றத்திற்கு உள்ளாகியுள்ளனர். தற்போது சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் கங்குவா படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் அவர் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், தற்போது வெற்றிமாறன் கொடுத்துள்ள பேட்டியொன்றில் வாடிவாசல் படம், தன்னுடைய விடுதலை 2 படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்தவுடன் துவங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். தற்போது படத்தின் சிஜி வேலைகளை லண்டனில் முன்தயாரிப்பு பணியாக நடைபெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
சூர்யா இந்தப் படத்திற்காக வளர்த்துவரும் காளையை ஸ்கேன் செய்து Animatronics வேலைகள் நடைபெற்று வருவதாகவும் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். இந்தப் படத்திற்கான முன் தயாரிப்பு பணிகளுக்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு காளையுடன் சூர்யா மோதும் காட்சிகளும் ப்ரீ சூட்டாக எடுக்கப்பட்டது. விரைவில் கங்குவா படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்யவுள்ளார் சூர்யா. இந்தப் படத்தை தொடர்ந்து அவர் சுதா கொங்கரா படத்தில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகிவரும் சூழலில், தற்போது வெற்றிமாறன் வாடிவாசல் படம் குறித்து பேசியுள்ளார். அடுத்ததாக சூர்யா வாடிவாசல் படத்தில் இணைய வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாக உள்ளது. ஆனால் சூரரைப் போற்று என்ற சிறப்பான படத்தை கொடுத்த சூர்யா – சுதா கொங்கரா இணை மீண்டும் கூட்டணி அமைக்கவுள்ளதும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.