ரத்தம், ரத்தம் என அமுதவாணன் தூக்கத்தில் உளறியதால், பக்கத்தில் படுத்திருந்த மணிகண்டன் அலறி அடித்து ஓடிய சம்பவம் போட்டியாளர்கள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
பிக்பாஸ் வீட்டில் நேற்றிரவு அமுதவாணன், தனது படுக்கையில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தார். அவருடன் கட்டிலில் ஒன்றாக தூங்குபவர் மணிகண்டன். அவர் வெளியில் சிறையில் அடைக்கப்பட்ட ராபர்ட் மாஸ்டருடன் பேசிவிட்டு படுக்கைக்கு திரும்பினார். அமுதவாணன் பக்கத்தில் படுத்த சில நிமிடங்களில் படுக்கையில் இருந்தவாரே மைனாவிடம் ஏதோ சொன்னார். அவர் முகத்தில் கடுமையான பயம் இருந்தது. மைனா அவரிடம் பதிலுக்கு ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார். பின்னர் திடீரென எழுந்து மைனா பக்கம் ஓடிவந்தார் மணிகண்டன்.
மைனாவிடம் வந்த மணிகண்டன் ஏய் என்ன இவரு ரத்தம் வேணும், ரத்தம் ரத்தம்னு சொல்கிறார் எனக்கு பயமாக இருக்கு என்றார். ஏதாவது பிராங்க் பண்ணுவார் போய் படு, என மைனா சொல்ல இல்ல அவரு உண்மையாகவே தூங்குகிறார். தூக்கத்தில் தான் அப்படி பேசுகிறார் என மணிகண்டன் சொல்ல மைனா எழுந்து வந்து அமுதவாணன பக்கத்தில் வந்து காது வைத்து கேட்க ஏய் ஆமாடா என்னென்னவோ சொல்கிறார் என பக்கத்து பெட் ஏடிகேவிடம் சொல்ல அவர் எழுந்து அமுதவாணன் பக்கத்தில் சென்று கேட்டுவிட்டு சிரித்தார்.
இதற்குள் சத்தம் கேட்டு அசீம் எழுந்து வந்தார். அவர் என்னவென்று கேட்க அமுதவாணன் தூக்கத்தில் ரத்தம் வேண்டும், “ராபர்ட் மாஸ்டர் போகக்கூடாது, வீட்டில் இருக்கணும் சத்யம் ஜெயிக்கணும், ராம் போகணும், ரத்தம் வேண்டும், ரத்தம் வேண்டும்” என பிதற்றிக் கொண்டிருந்ததாக சொன்னார். அனைவரும் பயத்தில் இருந்தனர். பின்னர் தைரியத்தை வரவழைத்துக் கொண்ட மைனா அமுதவாணனை எழுப்பினார். அவர் எழுந்தவுடன் அனைவரையும் முறைத்து பார்த்தார். ஏய் என்ன என்னென்னமோ பேசுற ரத்தம் என்கிறாய் என்ன ஆச்சு உனக்குன்னு மைனா கேட்க எதுவும் சொல்லாமல் எழுந்து போர்வையை எடுத்துக்கொண்டு அமுதவாணன் வெளியே சென்றார். அப்பவும் மைனா கேட்க ஒரு மனுஷன பைத்தியக்காரன் ஆக்காதீர்கள் என்று சொல்லிவிட்டு சென்றார்.
அன்றைக்கு தனலட்சுமியை பயமுறுத்தியது கூட உண்மையாக நடந்திருக்கும். அவன் சுய நினைவு இல்லாதது போல் இருந்தான் என அசீம் சொன்னார். தன்னிடம் நாக சக்தி இருப்பதாக சொல்வான் என்றும் அசீம் சொன்னார். அதன் பின்னர் கட்டிலில் பயந்தவாரே மணிகண்டன் படுக்க அசீம் தைரியமா படுடா கடவுள் இருக்கிறார் என்று சொல்ல, மைனா குங்குமம் வேண்டுமா தரட்டா எனக்கேட்க இல்லை திருநீறு இருக்கு என பக்கத்தில் இருந்த திருநீற்றை நெற்றியிலும் இட்டுக்கொண்டு, அமுதவாணன் படுத்திருந்த இடத்திலும் தூவி விட்டு படுத்தார் மணிகண்டன்.