தயாரிப்பாளராக இருந்து ஹீரோவாக மாறியவர் உதயநிதி ஸ்டாலின். இவர் தற்போது அரசியலில் பிசியாகிவிட்டதால் சினிமாவில் இருந்து முழுவதுமாக விலக முடிவெடுத்துள்ளார். தற்போது திமுகவில் விளையாட்டுத்துறை அமைச்சராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின், தமிழ் சினிமாவில் கடைசியாக நடித்துள்ள திரைப்படம் தான் மாமன்னன். கர்ணன், பரியேறும் பெருமாள் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் தான் இப்படத்தை இயக்கி உள்ளார். உதயநிதியின் கடைசி படம் என்பதால் இதனை பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாக்கி உள்ளனர். ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இத்திரைப்படம் வருகிற ஜூன் 29ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்திற்கான புரமோஷன் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் 7ஆம் அறிவு படம் குறித்து பேசிஉள்ளார் உதயநிதி ஸ்டாலின். அதில் ”7ஆம் அறிவு படத்தில் ஒரு டயலாக் இருக்கும். சமூக நீதியை, இட ஒதுக்கீட்டை விமர்சித்து அந்த வசனம் இடம்பெற்று இருக்கும். அந்த டயலாக்கை ஸ்ருதிஹாசன் பேசி இருப்பார். அந்த சமயத்தில் எனக்கு அரசியல் புரிதல் கிடையாது. சூர்யா சாரும் அந்த சீனில் இல்லை. படத்தின் ஷூட்டிங்கெல்லாம் முடித்து நான் படத்தை பார்த்தேன். எனக்கு எதுவும் தெரியல.
ஆனால், சூர்யா படத்தை பார்த்த உடன் எனக்கு போன் பண்ணினார். பாஸு இந்த படத்துல இட ஒதுக்கீடை விமர்சிப்பது போன்று ஒரு காட்சி வருகிறது. அது வேண்டாம் எடுத்திடலாம்னு சொன்னாரு. நான் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல், அது வெறும் டயலாக் தான விட்ருங்கனு சொல்லிட்டேன். அப்போ எனக்கு அரசியலில் அவ்வளவு அறிவு இல்லாததால் அதை புரிந்துகொள்ள முடியவில்லை. அதன்பின்னர் காலங்கள் கடந்து செல்லும் போது தான் அது தப்புனு எனக்கு புரியவந்தது” என கூறியுள்ளார்.