இந்தி படங்களை காண 3 டிக்கெட் வாங்கினால் ஒரு டிக்கெட் இலவசம் என கூவி கூவி விற்றும் ரசிகர்கள் யாரும் படம் பார்க்க வராததால், திரையரங்கு உரிமையாளர்கள் வேதனையடைந்துள்ளனர்.
இந்தியாவின் சினிமாத்துறை என்றாலே இந்தி திரையுலகம்தான் என்ற மாயை போக்கியிருக்கிறது தென்னிந்தியாவில் இருந்து வெளியாகும் திரைப்படங்கள். பாகுபலி, புஷ்பா, கே.ஜி.எஃப், விக்ரம் போன்ற படங்கள் இந்தியில் வெளியாகி சக்கைப்போடு போட்டது. இதனால், பாலிவுட் படங்கள் மீதான மவுசு இந்தி ரசிகர்களிடையே சற்று குறைந்திருப்பது அண்மைக்காலமாக வெளியாகும் இந்தி படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பு மூலம் அறியமுடிகிறது. அதன்படி, பெல்பாட்டம், பச்சன் பாண்டே, சாம்ராட் பிருத்விராஜ், கடந்த 11ஆம் தேதி வெளியான ‘ரக்ஷா பந்தன்’ போன்ற திரைப்படங்கள் குறிப்பிடத்தகுந்த வரவேற்பை கூடப்பெறவில்லை.
இதுபோக மிகப்பெரிய எதிர்ப்பார்ப்போடு வெளியான அமீர் கானின் ’லால் சிங் சத்தா’ படத்தை காண்பதற்கு கூட ரசிகர்கள் தியேட்டருக்கு செல்லவில்லை. பல மொழிகளிலும் புரோமோஷன் செய்தும் எதுவும் எடுபடவில்லை. இதனால், கல்லா கட்ட முடியாமல் திரையரங்கு உரிமையாளர்கள் திணறிக் கொண்டிருக்கிறார்கள். எப்படியாவது படத்தை ஓட வைத்து வசூலித்து விட வேண்டும் என்று திரையரங்கங்களும் பல்வேறு உத்திகளை கையாண்டு வருகின்றன.
அந்த வகையில் இந்த படங்களை காண PVR Cinemas நிறுவனம் சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது. அதன்படி இந்தி படங்களை காண 3 டிக்கெட் வாங்கினால் ஒரு டிக்கெட் இலவசம் என கூவி கூவி விற்றும் ரசிகர்கள் யாரும் படம் பார்க்க வரவில்லையாம். ஆனால், இந்தியில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகியுள்ள தெலுங்கு படமான கார்த்திகேயே 2-க்கு இந்தி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதாகவும் தியேட்டர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.