நடிகர் விஜய்யுடன் மீண்டும் படம் எடுக்க வாய்ப்பு கிடைத்தால் இயக்குவேன் என இயக்குனர் நெல்சன் தெரிவித்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் 900-க்கும் மேற்பட்ட திரையரங்குகளிலும், உலகம் முழுவதும் 4000-க்கும் அதிகமான திரையரங்குகளிலும் இப்படம் வெளியானது. 24 ஆண்டுகளுக்கு பின் ரஜினி மற்றும் ரம்யா கிருஷ்ணன் இணைந்து நடித்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த இயக்குனர் நெல்சன், ”மீண்டும் விஜய்யுடன் படம் எடுக்க வாய்ப்பு கிடைத்தால் இயக்குவேன். அவர் தான் அதனை தெரிவிக்க வேண்டும். கிண்டல்களை பெரிதாக எடுத்துக் கொள்ள தேவையில்லை. கமர்ஷியல் படம் எடுக்க நினைத்தால் அதன் நோக்கம் வெற்றியடைந்தால் போதும். விமர்சன ரீதியாக படமெடுக்க பெரிய ஆட்கள் தேவையில்லை என்றார்.
மேலும், ஒரு படத்தின் வெற்றி ஒருவாரம் அல்லது 10, 20 நாட்கள் இருக்கும். பின்னர் அதனை ரசிகர்கள் மறந்து விடுவார்கள். ஆனால், ஒரு படத்தை இயக்கும் அனுபவம் பெரிது. ஒரு படத்தினை இயக்க ஒரு வருடம் அல்லது ஒன்றரை வருடம் ஆகும். அப்போது ஏற்படும் அனுபவமே சிறந்தது. எனக்கு அதுதான் முக்கியமாகவும் தோன்றுகிறது” என்றார் நெல்சன்.