ஆஸ்கர் விருதுக்கு தேர்வான “செல்லோ ஷோ” படத்தில் நடித்த சிறுவன் திடீர் மரணமடைந்ததால் திரையுலகினர் அதிர்ச்சியிலும், சோகத்திலும் உள்ளனர்.
இந்தியா சார்பில் 95-வது ஆஸ்கர் திரைப்பட விழாவிற்கு தேர்வான ‘செல்லோ ஷோ’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ள ராகுல் கோலி திடீரென உயிரிழந்தார். இப்படத்தில் 6 சிறுவர்களில் ஒருவராக நடித்த ராகுல் கோலி, லுகேமியா எனும் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், புற்றுநோய் மருத்துவமனையில் கடந்த 4 மாதங்களாக ராகுல் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இவரது மறைவு திரையுலகினரிடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ராகுல் கோலியின் மரணம் தொடர்பாக அவரது தந்தை ராமு கோலி, “கடந்த 2ஆம் தேதி காலை உணவு சாப்பிட்ட பிறகு ராகுலுக்கு திடீர் என காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து, 3 முறை ரத்த வாந்தி எடுத்தார். பின்னர் மயங்கி விழுந்து ராகுலின் உயிர் பிரிந்தது. இதனால், ‘செல்லோ ஷோ’ படத்தை முழு குடும்பமும் சேர்ந்து ஒன்றாகப் பார்க்கலாம் என நினைத்தோம். ஆனால், அப்படம் வெளியாகும் முன்பே ராகுல் இல்லாமல் போய்விட்டார்” என உருக்கமாக கூறியுள்ளார். ‘செல்லோ ஷோ’ திரைப்படம் வருகிற 14ஆம் தேதி இந்தியாவில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், ராகுலின் இறுதிச்சடங்கிற்கு முன்னர் நாங்கள் குடும்பத்தோடு அவன் நடித்த ‘செல்லோ ஷோ’ படத்தை பார்க்க இருக்கிறோம் எனவும் ராகுலின் சிகிச்சைக்காக தங்களின் ஆட்டோவை விற்க இருந்தேன். ஆனால் நிலைமையை அறிந்த படக்குழுவினர் எனக்கு உதவி செய்தனர் எனவும் கூறியுள்ளார். இதுகுறித்து ‘செல்லோ ஷோ’ படத்தின் இயக்குநர் பான் நலின், “ராகுலைப் பார்த்துக் கொண்டு குடும்பத்துடன் இருந்தோம், ஆனால் கடைசியில் அவரைக் காப்பாற்ற முடியவில்லை” என வருத்தம் தெரிவித்துள்ளார்.