நடிகர் விஜய் நடிப்பில் வெளிவர இருக்கும் வாரிசு திரைப்படத்தின் ஆடியோ உரிமம் பற்றி தகவல் வெளியாகி இருக்கிறது.
தேசிய விருது பெற்ற இயக்குனர் வம்சி பைடிப்பள்ளியின் ‘வாரிசு’ படத்தை தேசிய விருது பெற்ற தயாரிப்பாளர் தில் ராஜு & ஷிரிஷ் தங்களது தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸின் கீழ் தயாரிக்கிறார்கள். இப்படத்தில் விஜய், ராஷ்மிகா, பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா, குஷ்பு போன்ற பிரபலங்கள் நடிக்கின்றனர். வாரிசு படத்திற்கு, ஹரி மற்றும் ஆஷிஷோர் சாலமன் இணைந்து கதை எழுதி உள்ளனர். இசை மற்றும் ஒளிப்பதிவு முறையே எஸ் தமன் மற்றும் கார்த்திக் பழனி கவனித்து வருகின்றனர். கேஎல் பிரவீன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். ஸ்ரீ ஹர்ஷித் ரெட்டி மற்றும் ஸ்ரீ ஹன்ஷிதா ஆகியோர் இப்படத்தின் இணை தயாரிப்பாளர்கள். இந்தப் படம் 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வந்தது. இதனைத் தொடர்ந்து அனைத்து நடிகர்களும் பங்கேற்கும் ஒரு நீண்ட மற்றும் முக்கியமான 2ஆம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்தது. இந்நிலையில், வாரிசு படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் உள்ள எண்ணூரில் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகின. இதனையடுத்து தளபதி விஜய் கலந்துகொள்ளும் ரயில் பாடல் படப்பிடிப்பு சென்னை திருவேற்காட்டில் உள்ள பிரபல கோகுலம் ஷூட்டிங் ஹவுஸில் நடைபெற்றது.
இந்நிலையில், இந்த படத்தின் ஆடியோ உரிமத்தை டி சீரிஸ் நிறுவனம் ரூ.10 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாடல்கள் அனைத்தும் நன்றாக வந்துள்ளதால், இது நிச்சயம் ஹிட் அடிக்கும் என்ற நம்பிக்கையில் டி சீரிஸ் நிறுவனம் பெரிய தொகை கொடுத்துள்ளதாக தெரிகிறது. தமிழ் சினிமாவில் ஆடியோ மட்டும் இவ்வளவு பெரிய தொகைக்கு போவது இதுவே முதல் முறை ஆகும். மேலும், இப்படத்தில் ஒரு பாடலை விஜய் பாடியுள்ளார் என்பதாலும், எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.