80 மற்றும் 90 களில் தாங்கள் தயாரிக்கும் அனைத்து படங்களிலும் எப்படியாவது சில்க் ஸ்மிதாவை புக் செய்து விட வேண்டும் என்று தயாரிப்பாளர்கள், விநியோகிஸ்தர்களும் ஆசைப்பட்ட ஒரே நடிகை சில்க் ஸ்மிதா தான்.. ஏனெனில் சில்க் ஸ்மிதாவின் பாடல் இருந்தால் படம் ஹிட்டாகி விடும் என்பதே அப்போது தயாரிப்பாளர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருந்தது.. சில்க் ஸ்மிதா என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது, அவரின் சொக்க வைக்கும் பார்வை, அவரது கொஞ்சி பேசும் மொழியும் தான். ஒரு பாடலுக்கு மட்டுமே நடனம் ஆடினாலும் ரசிகர்களை தன் வசப்படுத்தியவர்…
சில்க் ஸ்மிதாவின் இயற்பெயர் விஜயலட்சுமி.. ஆந்திராவில் ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்த அவர் குடும்ப வறுமைக் காரணமாக தனது 8 வயதிலேயே பள்ளிப்படிப்பை நிறுத்திவிட்டார். அதன்பிறகு சிறுவயதிலேயே திருமணம் செய்து வைக்கப்பட்டாலும், விஜயலட்சுமிக்கு திருமண வாழ்க்கையும் அவ்வளவு இனிமையாக அமையவில்லை. திருமணமான சில ஆண்டுகளிலேயே அவருக்கு விவாகரத்தும் ஆகிவிட்டது.
நடிகையாக வேண்டும் என்ற கனவுகளுடன் சென்னைக்கு வந்த விஜயலட்சுமி, வாய்ப்பு தேடி அலைந்து கொண்டிருந்த நேரத்தில் தான் அவரை ஏவிஎம் ஸ்டுடியோவிற்கு எதிரில் சந்தித்தார் இயக்குனர் வினுசக்கரவர்த்தி. பின்னர் வண்டிச்சக்கரம் என்ற திரைப்படத்தில் சில்க் என்ற கதாபாத்திரத்தில் சாராய வியாபாரியாக நடிக்க விஜயலட்சுமிக்கு வாய்ப்பு வழங்கினார். அதில் சில்க் கதாபாத்திரம் வெகுவாக பேசப்பட்டது.
அந்தப் படத்திற்கு பிறகு தான் தனது பெயரை சில்க் ஸ்மிதா என மாற்றிக்கொண்டார். கிறங்க வைக்கும் பார்வை, மாநிறம், சொக்க வைக்கும் உடலமைப்பு ஆகியவை அவரை புகழின் உச்சிக்கு அழைத்து சென்றன. இதனால் குறுகிய காலத்திலேயே 400-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார் சில்க் ஸ்மிதா. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய திரையுலகையே கட்டுக்குள் வைத்திருந்தார் என்றால் அது மிகையாகாது.. இன்னும் சொல்லப் போனால் சில்க் ஸ்மிதாவின் கால்ஷீட்க்காக இந்திய திரையுலகமும் காத்துக்கிடந்தது..
கவர்ச்சியான கதாபாத்திரங்களே அதிகமாக வழங்கப்பட்டாலும் தனது நடிப்பை வெளிப்படுத்தக்கூடிய கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்பதே சில்க் ஸ்மிதாவின் கனவு. அந்த வகையில் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்த வெகு சில படங்களில் வாய்ப்பு கிடைத்தாலும் கிடைத்த வாய்ப்புகளில் தனது அசாத்திய நடிப்பை வெளிப்படுத்தினார் சில்க் ஸ்மிதா. அலைகள் ஓய்வதில்லை, நேற்று பெய்த மழையில், மூன்றாம் பிறை ஆகிய படங்களில் சில்க் ஸ்மிதாவின் நடிப்பே அதற்கு சாட்சி..
தமிழ் படங்களை விடவும் மலையாள திரைப்படங்களில் நடிக்கவே சில்க் ஸ்மிதா அதிக ஆர்வம் காட்டினார்.. ஏனெனில் மலையாளப் படங்களில் கவர்ச்சியை காட்டிலும், தனது நடிப்பை வெளிப்படுத்தும் விதமான கதாபாத்திரங்கள் வழங்கப்படுவதாக அவர் நினைத்தார். கவர்ச்சி நடிகையாக இருந்ததால் பலரின் பாலியல் சீண்டல்களுக்கும் சில்க் ஆளானார்.. ஆண்களால் தனக்கு ஏற்பட்ட பாலியல் ரீதியான நெருக்கடிகளை பலமுறை அவரே கூறியுள்ளார். இதற்காகவே மிக குறுகிய நட்பு வட்டத்தையே கொண்டிருந்தார்.. அதுவே தனக்கு பாதுகாப்பாக இருக்கும் என்று அவர் கருதினார்..
சில்க் ஸ்மிதாவிடம் ஒருமுறை உங்களின் நிறைவேறாத ஆசை என்ன என்று நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.. அதற்கு தான் ஒரு நக்சலைட் ஆக வேண்டும் என்று விரும்பியதாக சில்க் ஸ்மிதா பதில் கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.. மேலும் “ ஆனால் பல பிரச்சனைகள் காரணமாக என் வாழ்க்கை திசை மாறிப் போனது.. இன்றும் என் மனதில் அந்த நெருப்பு எரிகிறது..” என்று கூறினார் சில்க் ஸ்மிதா.. நக்சலைட் என்பவர்கள், தேடப்படும் குற்றவாளிகள் என்று நிருபர் கூற, “அரசாங்கத்தால் வாழ்வதற்கு அனுமதிக்கப்பட்டிருக்கும் நம்மைவிட, தேடப்படும் குற்றவாளிகள் சுதந்திரமானவர்கள் என்று நான் நினைக்கிறேன்” என பதிலளித்தார் சில்க் ஸ்மிதா..
சினிமாவில் நடிக்க தொடர்ந்து எத்தனையோ வாய்ப்பு கிடைத்தாலும், அவரது தனிப்பட்ட வாழ்க்கையாலும், சிலரின் நம்பிக்கை துரோகத்தாலும் மன உளைச்சலுக்கு ஆளானார். படத்தயாரிப்பில் ஏற்பட்ட நஷ்டம், தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த பல மர்மங்கள் உள்ளிட்ட பல காரணங்களால் மிகுந்த மனஉளைச்சல் அடைந்த சில்க் ஸ்மிதா கடந்த 1996-ஆம் ஆண்டு இதே நாளில் தான் (செப்டம்பர் 23) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். எனினும் அவர் தற்கொலை செய்துகொள்ளவில்லை, கொலை செய்யப்பட்டார் என்று அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டினர்..
மேலும் சில்க் ஸ்மிதாவுடன் இருந்த ஒரு தாடிக்காரர் தான் அவர் மரணத்திற்கு காரணம் என்று அவர்கள் குற்றம்சாட்டினர். எனினும் அவர் தற்கொலை செய்துகொண்டதாகவே போலீசார் வழக்கை முடித்து வைத்தனர். அவர் உயிரை விட்டு கால் நூற்றாண்டு கடந்தாலும் இன்னும் அவர் பல ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்… சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட Dirty Picture என்ற பெயரில் வெளியான பாலிவுட் படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.. எனினும் அவரின் மரணத்தின் மர்மம் மட்டும் இன்னும் விலகவில்லை..