பிரபல தெலுங்கு நடிகரான விஜய் தேவரகொண்டா, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியின் ‘பயோபிக்’ திரைப்படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.
ஆசிய கோப்பையில் இந்தியா – பாகிஸ்தான் ஆட்டத்தை காண தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகரான விஜய் தேவரகொண்டா சென்றிருந்தார். போட்டியின்போது எந்த கிரிக்கெட் வீரரின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க ஆசைப்படுகிறீர்கள் என்று, தெலுங்கு கிரிக்கெட் வர்ணனையாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். அப்போது அவர்களிடம் மிகவும் உற்சாகமாக பேசிய விஜய் தேவரகொண்டா, “தோனியின் பயோபிக் படத்தில் நடிக்க ஆசையாக உள்ளது. ஆனால், துரதிருஷ்டவசமாக சுஷாந்த் சிங் ராஜ்புட் நடிப்பில் அது ஏற்கனவே உருவாக்கப்பட்டுவிட்டது. அதனால் விரைவில் விராட் கோலியின் பயோபிக் படத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன்” என்று தெரிவித்தார். தெலுங்கு வர்ணனையாளர்களுக்கு பதிலளிக்கும்போது விராட் கோலியை அண்ணா என்றே, விஜய் தேவரகொண்டா அழைத்து வந்தார். இதனால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன், மைக் டைசன், ரோனித் ராய் ஆகியோர் நடிப்பில் கடந்த 25ஆம் தேதி வெளியான ‘லைகர்’ படம் கடும் விமர்சனங்களால் படுதோல்வியை சந்தித்துள்ளது. பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள இந்தப் படம் 5 நாட்களாகியும் 50 கோடி ரூபாய் வசூலை நெருங்க முடியாமல் பாக்ஸ் ஆபீஸில் திணறி வருவது குறிப்பிடத்தக்கது.