நடிகையும், இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணன் தனது அடுத்த படம் குறித்து கூறிய போது ’இது ஒரு சொல்லப்பட வேண்டிய கதை என்றும் இந்த படத்தை எந்த ஜானரிலும் வகைப்படுத்த முடியாது’ என்றும் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகையாக இருப்பவர் லட்சுமி ராமகிருஷ்ணன். இவர், ’ஆரோகனம்’ ’நெருங்கி வா முத்தமிடாதே’ ’அம்மணி’ மற்றும் ’ஹவுஸ் ஓனர்’ ஆகிய 4 திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். இந்நிலையில், தற்போது அவர் ’ஆர் யூ ஓகே பேபி’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டதாகவும் தெரிகிறது.
சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் அபிராமி, பவன் நவநீதன், ரோபோ சங்கர், வினோதினி உள்பட பலர் நடித்துள்ளனர். லட்சுமி ராமகிருஷ்ணன் ஒரு முக்கிய வேடத்தில் இந்த படத்தில் நடித்துள்ளார். இசைஞானி இளையராஜா இசையில் உருவாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் கேரளாவில் நடைபெற்று வந்த நிலையில், தற்போது படப்பிடிப்பு முடிவடைந்தது.
இந்த படம் குறித்து சமீபத்தில் பேட்டியளித்த லட்சுமி ராமகிருஷ்ணன், “இது ஒரு சொல்லப்பட வேண்டிய கதை என்பதால் பல சவால்களை எதிர்த்து போராடி படத்தை முடித்து உள்ளோம் என்றும் இளையராஜா இசை எங்கள் படத்திற்கு கிடைத்தது மிகப்பெரிய பரிசு என்றும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன என்றும் இந்த படத்தை எந்த ஜானரிலும் வகைப்படுத்த முடியாது என்றும் கலவையான ஜானரை கொண்டது” என்றும் அவர் கூறினார்.