விஜய் டிவியில் ஒளிபரப்பான ’கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சி மூலம் பிரபலமான தீனாவுக்கு இன்று திருமணம் நடந்து முடிந்துள்ளது.
திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த தீனா, சினிமா அல்லது தொலைக்காட்சியில் எப்படியாவது பெரிய ஆளாக வர வேண்டும் என்கிற எண்ணத்தில் சென்னை கிளம்பி வந்தவர். ஆரம்பத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ’கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியில் உதவி இயக்குநராக சில ஆண்டுகள் பணியாற்றினார். அப்போது இவரது டைமிங் வசனங்கள், நகைச்சுவை திறமையை கண்ட பலரும், மேடைகளில் பங்கேற்று திறமைகளை வெளிக் கொண்டு வர வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில், கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் ஸ்டேஜ் ஏற, அந்த நிகழ்ச்சியே தீனாவை உச்சத்துக்கு கொண்டு சென்றது. இதன்பின்னர் சினிமா பக்கம் வந்த தீனா, தனுஷ் இயக்கிய பவர் பாண்டி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி, மாஸ்டர் படங்களில் நல்ல கேரக்டரில் நடித்திருந்தார். தொடர்ந்து தனது நகைச்சுவையால் மக்கள் மனதை வென்ற தீனா, கடந்த மார்ச் மாதம் சொந்த ஊரில் சொந்தமாக வீடு ஒன்றை கட்டியிருந்தார். அவருக்கு அனைவரும் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், தீனாவுக்கு இனிதே திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. கிராஃபிக் டிசைனராக பணியாற்றி வரும் பிரகதீஸ்வரி என்ற பெண் தான் தீனாவுக்கு மனைவியாக அமைந்துள்ளார். இந்த திருமணம் முழுக்க முழுக்க பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் ஆகும். அவரது திருமண விழாவில் ஏராளமான பிரபலங்கள் பங்கேற்றனர். இதற்கிடையே, தீனாவின் திருமண புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.