நடிகர் விஜய்யின் ‘வாரிசு’ திரைப்படம் ஜனவரி 11ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வருகிறது. இந்த படத்துக்கு தணிக்கை குழு யூ சான்றிதழ் அளித்து உள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். அதே போல பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், ஷ்யாம், யோகி பாபு, ஜெயசுதா, குஷ்பு என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில், வாரிசு படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று மாலை வெளியானது. ட்ரெய்லரில் குடும்ப உறவுகள், அடிதடி சண்டை, காதல், பஞ்ச் வசனங்கள் என அனைத்தும் கலந்து இருந்தது.
இந்தநிலையில், ஜனவரி 11ஆம் தேதி நடிகர் விஜய்யின் ‘வாரிசு’ திரைப்படம் வெளியாகிறது என படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. முன்னதாக இந்தப் படம் ஜனவரி 12ஆம் தேதி வெளியாவதாக இருந்தது. ஆனால், தற்போது இந்த புதிய அறிவிப்பால் விஜய் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். நடிகர் அஜித்தின் துணிவு படமும் ஜனவரி 11ஆம் தேதியன்று வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.