நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் வம்சி இயக்கும் ‘வாரிசு’ படத்தில் நடித்துள்ளார் விஜய். தில் ராஜு தயாரித்துள்ள இப்படம் ஒரு எமோஷனல் குடும்பப் படம் என்று கூறப்படுகிறது. வித்தியாசமான கேரக்டரில் விஜய் நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். வாரிசு படத்தின் மூலம் விஜய் படத்திற்கு முதன்முறையாக இசையமைக்கும் வாய்ப்பைப் பெற்றார் தமன். கடந்த வாரம் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. இதில் விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.

இந்நிலையில், ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம், “வாரிசு திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை 5 மணிக்கு சன் டிவி யூ-ட்யூப் சேனலில் வெளியாகும். சீ ‘யு’ சூன்” என படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்ததை குறிப்பிட்டனர். இன்று ட்ரெய்லர் வெளியாகும் என்பதால், விஜய் ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். காலை முதலே சோஷியல் மீடியாக்களில் வாரிசு படத்தை ட்ரெண்டு செய்து வருகின்றனர். குறிப்பாக இந்த பொங்கலுக்கு துணிவு படமும் ரிலீஸ் ஆகவுள்ளதால் கடும் போட்டியாக வாரிசு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக துணிவு படத்தின் ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஆனாலும் துணிவு ரிலீஸ் தேதி இன்னமும் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் இன்று வாரிசு ட்ரெய்லரின்போது ரிலீஸ் தேதி வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.