விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம், திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பே வசூலை குவித்து வருவதாக தயாரிப்பாளர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கும் ’வாரிசு’ திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி வருகிறது. தமிழில் வாரிசு என பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில் தெலுங்கில் இந்த படத்திற்கு வாரசுடு என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். அதே போல பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், ஷ்யாம், யோகி பாபு, ஜெயசுதா, குஷ்பு என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் இணைந்துள்ளனர். விஜய்யின் வழக்கமான ஆக்ஷன் படமாக இல்லாமல் ஃபேமிலி செண்டிமெண்ட் படமாக உருவாகி வருகிறது. 2023 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இத்திரைப்படம் வெளியாக உள்ளது.

இந்நிலையில், வாரிசு திரைப்படம் வெளியீட்டிற்கு முன்பே வசூலை குவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் தொலைக்காட்சி உரிமை ரூ.50 கோடிக்கும், டிஜிட்டல் உரிமை ரூ.60 கோடிக்கும் விற்கப்பட்டுள்ளதாகவும், இதனால் தயாரிப்பாளர் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. வாரிசு படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ள விஜய்யின் 67-வது படம் தொடங்குவதற்கு முன்பே ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது.