”வெந்து தணிந்தது காடு” படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா ரூ.3 கோடி பொருட்செலவில் நடக்க உள்ளதாக கூறப்படுகிறது.
சிம்பு நடித்துள்ள “வெந்து தணிந்தது காடு” படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா மிக பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் – ஏ.ஆர்.ரஹ்மான் – சிம்பு கூட்டணி மூன்றாவது முறையாக இந்தப் படத்தில் இணைந்திருக்கிறார்கள். இப்படத்தில் சிம்புவுடன் ஸித்தி இதானி, ராதிகா, நீரஜ் மாதவ் எனப் பலரும் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து வெளியீட்டுக்கான வேலைகள் நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக படத்தின் இசை வெளியீட்டு விழாவை மிக பிரம்மாண்டமாக நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
வரும் செப்டம்பர் 2ஆம் தேதி இந்தப் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் யுனிவர்சிட்டியில் நடைபெற உள்ளது. சுமார் ரூ. 3 கோடிக்கும் மேலான பொருட்செலவில் இந்த நிகழ்வு நடக்க உள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான ரஜினி, கமல் உட்பட பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சுமார் 6,000 பேர் கலந்து கொள்ளும் வகையில், பிரம்மாண்டமான செட் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கோலிவுட் சினிமா வரலாற்றில் மிக பிரம்மாண்டமான முறையில் நடக்கும் ஆடியோ வெளியீட்டு விழா இதுவாக இருக்கும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.