நடிகை சமந்தா தொடர்ந்து மயோசிடிஸ் பாதிப்பால் அவதிப்படுவதால் ஒரு அதிர்ச்சிகரமான முடிவை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோலிவுட், டோலிவுட்டில் முன்னணி நடிகையாக கலக்கி வரும் சமந்தா, கடைசியாக தமிழில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நடித்திருந்தார். விஜய் சேதுபதி, நயன் ஆகியோருடன் சமந்தா இணைந்து நடித்த இந்தப் படம் ரசிகர்களின் வரவேற்போடு வெற்றிப் பெற்றது. இதனையடுத்து சமந்தா லீடிங் கேரக்டரில் நடித்த ‘யசோதா’ பான் இந்தியா படமாக கடந்த 11ஆம் தேதி வெளியானது. ஆக்ஷன் பிளஸ் சென்டிமெண்டலாக உருவான இந்தப் படம், பாக்ஸ் ஆபிஸில் 33 கோடிக்கும் மேல் வசூலித்து மாஸ் காட்டியிருந்தது. இதனால், சமந்தாவின் நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் படங்கள் மீதான எதிர்பார்ப்பும் அதிகமானது.

யசோதா படத்தில் நடித்து வரும் போதே சாகுந்தலம், குஷி ஆகிய படங்களின் ஷூட்டிங்கிலும் கலந்துகொண்டார் சமந்தா. இந்நிலையில், சாகுந்தலம், குஷி படங்களை முடித்துவிட்டு சமந்தா கொஞ்சம் பிரேக் எடுக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்னர் சமந்தாவின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. ஒருகட்டத்தில் சமந்தாவே அதுகுறித்து மனம் திறந்தார். அதில், தனக்கு மயோசிடிஸ் நோய் பாதிப்பு இருப்பதாகவும், அதனால் தான் ரொம்பவே கஷ்டப்பட்டதாகவும் உருக்கமாக தனது இன்ஸ்டாவில் பதிவிட்டிருந்தார். மேலும் உடலில் குளுகோஸ் ஏற்றியபடி சமந்தா சிகிச்சை எடுத்துகொள்ளும் போட்டோவையும் ஷேர் செய்திருந்தார். அதேபோல், யசோதா படத்தின் ப்ரோமோஷன் பேட்டியிலும் தனது உடல்நிலை குறித்து கண் கலங்கினார்.

இந்த சூழலில், உடல்நிலை மோசமாக இருப்பதால் நடிப்பில் இருந்து சிறிது காலம் ஓய்வெடுக்க சமந்தா திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஹைதராபாத் வீட்டில் ஓய்வில் இருக்கும் சமந்தா, நலமாக இருப்பதாகவே அவரது மேலாளர் சில தினங்களுக்கு முன்னர் கூறியிருந்தார். ஆனால், தற்போது சமந்தா சினிமாவில் இருந்து தற்காலிகமாக ஓய்வெடுக்கவுள்ளதாக வெளியான தகவல், அவரது ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.