நடிகர் விஷால் நடிப்பில் தற்போது ‘மார்க் ஆண்டனி’ திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார். இப்படத்தில் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக ரித்து வர்மா நடிக்கிறார். இதுதவிர எஸ்.ஜே.சூர்யா, புஷ்பா வில்லன் சுனில், இயக்குனர் செல்வராகவன் உள்பட பலர் நடிக்கின்றனர். விஷால் நடித்த எனிமி படத்தை தயாரித்த மினி ஸ்டூடியோஸ் நிறுவனம் தான் இப்படத்தையும் தயாரிக்கிறது. மார்க் ஆண்டனி படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. மார்க் ஆண்டனி படத்தின் டீசரை படக்குழு இன்று வெளியிட உள்ளது. இப்படத்தின் டீசர் இன்று மாலை 6.30 மணிக்கு ரிலீஸ் செய்யப்படும் என ஏற்கனவே அறிவிப்பு வெளியாகிவிட்ட நிலையில், தற்போது அந்த டீசரை நடிகர் விஜய்யிடம் போட்டுக்காட்டி படக்குழுவினர் ஆசி பெற்றுள்ளனர்.
அந்த டீசரை பார்த்த நடிகர் விஜய், படக்குழுவினருக்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். தற்போது மார்க் ஆண்டனி படக்குழுவினர் விஜய்யை அவரது புதிய அலுவலகத்தில் சந்தித்த போது எடுத்த புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகர் விஷால், என்னுடைய அன்பான அண்ணன் மற்றும் ஹீரோ விஜய்யை சந்தித்ததில் மகிழ்ச்சி. என்னுடைய மார்க் ஆண்டனி பட டீசரை பார்த்ததற்கு நன்றி. எப்போதும் உங்கள் ரசிகனாக இருப்பதில் பெருமைப்படுகிறேன் என பதிவிட்டுள்ளார். அதோடு இன்று காலை விஷால் பதிவிட்ட #ThalapathyVijayforMarkAntony என்கிற ஹேஷ்டேக்கும் ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது.