’சூர்யா 42’ திரைப்படம் சார்ந்த வீடியோ மற்றும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தயாரிப்பு நிறுவனம் எச்சரித்துள்ளது.
நடிகர் சூர்யாவின் 42-வது படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி கதாநாயகியாக நடிக்கிறார். ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்ற நிலையில், படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சில தினங்களாக இந்தப் படம் சார்ந்த படப்பிடிப்பு தளத்தின் வீடியோவும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. குறிப்பாக படக்குழுவை சார்ந்தவர்களே படப்பிடிப்பு தளம் தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்களை இன்ஸ்டகிராமில் பகிர்ந்தனர்.
இந்த நிலையில், படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம், ஒரு அறிவிப்பை ட்விட்டரில் வெளியிட்டுள்ளது. அதில் ”நாங்கள் சூர்யா 42 சார்ந்த வீடியோ மற்றும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பார்க்க நேர்ந்தது. எந்த ஒரு உழைப்பும் இரத்தமும் வேர்வையும் சிந்தி ஒரு குழுவால் உருவாக்கப்படுகிறது. இந்தப் படத்தை மிகச்சிறந்த திரை அனுபவமாக உங்களுக்கு அளிக்க விரும்புகிறோம். எனவே, இந்தப் படம் சார்ந்த வீடியோ, புகைப்படங்கள் போன்றவற்றை பகிர்ந்திருந்தால் அதை உடனடியாக நீக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். மேலும், இது போன்றவற்றை இனி பகிர்ந்தால் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துக் கொள்கிறோம்” என தெரிவித்துள்ளது.