ஏ.ஆர்.ரகுமானின் பெயரை கனடாவில் உள்ள ஒரு தெருவிற்கு வைத்து கௌரவித்துள்ளது அந்த நாட்டு அரசு.
இந்திய சினிமாவின் மிகப்பிரபலமான இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான். ஆங்கிலப் படங்களுக்கும் இசையமைத்து, இரண்டு ஆஸ்கர் விருதுகள் பெற்று உலகம் முழுக்க பிரபலமாக இருக்கிறார். இந்நிலையில், கனடா நாட்டின் Markham என்ற நகரத்தின் தெருவுக்கு ஏ.ஆர்.ரகுமானின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. கடந்த 2013இல் ஒரு முறை இதே Markham நகரின் வேறு ஒரு தெருவுக்கு ”அல்லா ரக்கா ரகுமான்” என அவரது பெயரை ஏற்கனவே வைத்தனர். தற்போது, இரண்டாவது முறையாக அவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒரு நிகழ்வையும் ஏற்பாடு செய்து கலை நிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்திருக்கிறார்கள் Markham நகரத்தினர்.

இந்நிகழ்வில் ஏ.ஆர்.ரகுமானின் இசையில் உருவான பாடல்களை பாடியும், இசைக்கருவிகளில் இசைத்தும் ஏ.ஆர்.ரகுமானை கௌரவித்துள்ளனர். மேலும் இந்த நிகழ்வில் Markham நகர மக்களுக்கு நன்றி தெரிவித்துப் பேசியிருக்கிறார் ஏ.ஆர்.ரகுமான். “இப்படியான ஒன்றை என் வாழ்வில் நான் கனவிலும் நினைத்துப் பார்த்ததில்லை. Markham நகரத்து மேயருக்கும், கனடா மற்றும் இந்திய மக்களுக்கு என் நன்றி. ஏ.ஆர்.ரகுமான் என்பது எனது பெயரல்ல, அதற்கு கருணை என்று பொருள். இந்தக் கருணைதான் கடவுளை நோக்கி பயணிக்கும் அனைவருக்கும் முக்கியமான தகுதி. எனவே இந்தப் பெயர், அமைதியையும் மகிழ்ச்சியையும், ஆரோக்கியத்தையும் கனட நாட்டு மக்களுக்கு அளிக்கட்டும்” எனப் பேசி தன் இசைப் பயணத்தில் உடன் இருந்த அனைவருக்கும் நன்றியையும் தெரிவித்தார்.