சிம்பு நடித்துள்ள ’பத்து தல’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ள நிலையில், அப்படத்தின் முதல் காட்சியை பார்க்க நடிகரும் சிம்புவின் தீவிர ரசிகருமான கூல் சுரேஷ் ஹெலிகாப்டருடன் வந்துள்ளார்.
ஒபிலி என் கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள ’பத்து தல’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இப்படத்தின் முதல் காட்சி இன்று காலை 8 மணிக்கு திரையிடப்பட்டது. இதற்காக தியேட்டர் முன் பட்டாசு வெடித்து, மேள தாளங்கள் முழங்க ஆடிப்பாடியும் சிம்பு ரசிகர்கள் கொண்டாடினர். குறிப்பாக சிம்புவின் தீவிர ரசிகரான நடிகர் கூல் சுரேஷ், பத்து தல படத்தின் முதல் ஷோ பார்க்க ஹெலிகாப்டரில் வருவேன் என கூறி இருந்தார். வீட்டை விற்றாவது ஹெலிகாப்டரில் வருவேன் என ஆவேசமாக பேட்டியும் அளித்திருந்தார்.
ஆனால், இன்று தியேட்டருக்கு கையில் பொம்மை ஹெலிகாப்டர் ஒன்றை தூக்கிக்கொண்டு பத்து தல FDFS பார்க்க வந்துள்ளார் கூல் சுரேஷ். சென்னையில் உள்ள ரோகினி தியேட்டருக்குள் பொம்மை ஹெலிகாப்டர் உடன் வந்த நடிகர் கூல் சுரேஷை ரசிகர்கள் சூழ்ந்துகொண்டு செல்ஃபி எடுத்துக் கொண்டனர். இதுகுறித்த வீடியோ காட்சிகள் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.