தைவான், ஹாங்காங், பிலிப்பைன்ஸ் மற்றும் தெற்கு சீன கடற்கரை பகுதிகளில் அதிபயங்கர புயலான ‘ரகசா’ புயல் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகவும் சக்திவாய்ந்ததாக கருதப்படும் இந்தப் புயல், இதுவரை தைவானில் 14 பேரையும், பிலிப்பைன்ஸில் 4 பேரையும் காவு வாங்கியுள்ளது.
இந்த புயலில் மனிதர்கள், கார்கள், சாலைகள் மற்றும் பாலங்களை கூட அடித்துச் செல்லப்பட்டன. ஹாங்காங்கில் கடல்நீர் ஹோட்டல் லாபிக்குள் புகுந்து அங்கிருந்தவர்களை அடித்துச் செல்லும் பயங்கரக் காட்சிகளும் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
இந்த புயல் ஹாங்காங்கில் இருந்து மெதுவாக விலகி, தற்போது சீனாவில் உள்ள குவாங்டாங் மாகாணத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, குவாங்டாங் மாகாணத்தில் பள்ளிகள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டு, ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
இந்தப் புயலால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 760 பேர் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும், பல விமானங்கள் மற்றும் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
தைவானில், குவாங்பு நகரில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால், பாலம் ஒன்று இடிந்து விழுந்தது. வெள்ளம் சாலைகளை ஆறுகளாக ஓடியதால், கார்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் அடித்துச் செல்லப்பட்டன. இதையடுத்து, மீட்புப் படையினர் வீடு வீடாகச் சென்று மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றினர்.
இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 124 பேரைத் தொடர்புகொள்ள முடியவில்லை எனவும் உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், சக்திவாய்ந்த புயல் காற்று தைவானில் உள்ள ஒரு பாலத்தின் மேற்கூரையை பிய்த்து எறிந்தது. 100-க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன. ஆற்றின் அருகிலுள்ள பகுதிகளிலும், விளையாட்டு மைதானங்களிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்த புயலால் பாதிக்கப்பட்ட 30-க்கும் மேற்பட்டோர் உள்ளூர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Read More : ஆதார் கட்டணம் உயர்வு..!! அதிர்ச்சியில் மக்கள்..!! இனி எவ்வளவு தெரியுமா..? அக்.1ஆம் தேதி முதல் அமல்..!!