பெங்களூருவை சேர்ந்த மாணவி, தனது சகோதரியை சந்திப்பதற்காக ஹைதராபாத் சென்றுள்ளார். அங்கிருந்து ஒரு தனியார் பேருந்தில் தனியாக பெங்களூரு திரும்பும்போது, பேருந்தில் இருந்த கிளீனர், மாணவி தனியாகப் பயணிப்பதை கண்டுள்ளார்.
பின்னர், இரவில் பேருந்தில் பயணிக்கும்போது, ஜன்னலை மூடுவதாக சொல்லி கிளீனர், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி, தனது தாயிடம் தொலைபேசியில் விவரத்தை கூறியுள்ளார். அப்போது, தொலைபேசியில் சார்ஜ் குறைந்ததால், அதை சார்ஜ் செய்ய ஓட்டுநரிடம் கொடுத்துள்ளார்.
போன் சார்ஜ் ஆனதும், அதை வாங்குவதற்காக கிளீனர் அருகே சென்ற மாணவியிடம், “முத்தம் கொடுத்தால் மட்டுமே போன் கிடைக்கும்” என மிரட்டியுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த மாணவி, ஓட்டுநரிடம் இருந்து போனை பெற்றுக் கொண்டு, தனது சகோதரனுக்கு நடந்ததை சொல்லியுள்ளார்.
மாணவியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பெங்களூருவில் பேருந்துக்காக காத்திருந்தனர். பேருந்து வந்தவுடன், பொதுமக்கள் முன்னிலையில் கிளீனரை பிடித்து சரமாரியாக தாக்கி, அவரது ஆடைகளை கிழித்து, அரை நிர்வாணமாக நிற்க வைத்துள்ளனர். பிறகு, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கிளீனரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
விசாரணையில், கிளீனரின் பெயர் ஆரிப் கான் எனத் தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவத்தால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ஓட்டுநர் தனக்கு எதுவும் தெரியாது என்று போலீசாரிடம் கூறியுள்ளார். இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.